மரங்கள் வெட்ட எதிர்ப்பு: சமூக ஆர்வலர்கள் கைது!
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் மட்டும் 200 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள ஆரே காலனி மும்பை பெருநகரின் பசுமை நுரையீரல் என்று இயற்கை ஆர்வலர்களால் சொல்லப்படுகிறது. இங்கு சுமார் 5 லட்சம் மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் மரங்களை அகற்றி அவ்விடத்தில் மும்பையின் மூன்றாவது மெட்ரோ பணிமனையை அமைக்க மும்பை பெருநகர மாநகராட்சி கடந்த இரு ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. 2, 656 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று (அக்டோபர் 4) தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம் , மாநகராட்சி வழங்கிய அனுமதியை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே அப்பகுதியிலிருந்த மரங்களை வெட்டுவதற்கு அரசு தீவிரம் காட்டியுள்ளது. மரம் வெட்டும் இயந்திரங்கள், ஜேசிபி கொண்டு வரப்பட்டு மரங்கள் வெட்டும் பணி நடைபெற்றது. நள்ளிரவில் மட்டும் 200 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மரம் வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு ஆரே காலனியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மரங்கள் வெட்டப்படுவது குறித்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆதிவாசி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 38 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மும்பை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரே அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசையும் மோடி அரசையும் தாக்கி பேசியுள்ள அவர், மெட்ரோ பணிகளின் பெயரில் மரங்களை அழிப்பது வெட்கக்கேடானது. மரங்களுக்குப் பதில் இவர்கள் காஷ்மீரில் பயங்கரவாத இலக்குகளை அழித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆரே காலனி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை