கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்!📷

கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் அதற்கு மீனவ சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தியமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக வருகை தந்த அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இப்பிரதேசத்தில் கடற்றொழில் செய்யும் மீனவ சமூகம் ஆழ்கடலுக்குச் செல்லும் போது அங்கிருந்து கரையிலுள்ள குடும்ப உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான தொலைத்தொடர்பாடல் கருவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிக பணம் செலவழித்து படகுகளை கொள்முதல் செய்யும் படகு உரிமையாளர்கள் சிறு தொகையினைச் செலுத்தி அக்கருவியினை கொள்வனவு செய்வதற்கு தயங்குவது ஏனென்று தெரியாது. அதனைக் கொள்வனவு செய்வதற்கு வங்கிகளுக்கூடாக குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு அமைச்சினுடாக உதவிகள் செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது கொள்வனவு செய்யப்படும் வலைகள் இரண்டு மூன்று மாதங்களில் சேதமடைவதாகவும், அதனால் படகு உரிமையாளர்கள் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று மீனவர்களால் சட்டிக்காட்டப்பட்ட போது, அது தொடர்பான பிரச்சினையை தமது அமைச்சுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறும், உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓட்டமாவடி பாலம் வரையிலான கரையோரப்பிரதேசத்தில் வீதி அமைப்பதற்கும் படகுகளைக் கட்டுவதற்கு வசதியாக இறங்குதுறை அமைப்பதற்குமான இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் பார்வையிட்டதுடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஆழ்கடல் கடற்றொழில் அலகு காரியாலயமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ருக்ஸான் குறூஸ், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் ஜி.ஆர்.விஜிதன், அமைச்சின் அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.