கமல்ஹாசனின் சதுரங்கவேட்டை!


ஒருவனை ஏமாற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது அவன் உழைப்பின் மேல் சவாரி செய்ய நினைக்கும் கைங்கரியத்தை இன்றும் பல முதலாளி வர்க்கங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.பிக்பாஸ் நிகழ்வின் கடைசிக்கு முதல் வாரத்தில் தர்ஷன் விஜய் ரீவியின் வியாபார உத்தியின் நிமித்தம்(முன்னய பதிவில் அதப்பற்றி விபரித்திருந்தேன்) அநியாயமாக வெளியேற்றப்பட்ட போது கமல்ஹாசனையும் பலரும் திட்டித்தீர்த்தனர். அதிலும் தர்ஷனுக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை என்று வாய் கூசாமல் பலமுறை கமல்ஹாசன் கூறியது, செரீனை விட தர்ஷன் குறைவான ஓட்டுக்களை வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்ற வகையில் கமல்ஹாசன் மேலான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருந்தது. கமலும் வழமை போல இது விஜய் ரீவியின் முடிவு, தான் அங்கே வேலை செய்கிறேன், எனக்கும் இதில் உடன்பாடு இல்லை, ஓட்டுப்பட்டியலை நானும் பார்த்தேன் என்று என்னென்னவோ சொல்லி சமாளிக்க முயன்றுகொண்டிருந்தார். தர்சனிடம் மேடையில் பேசும் போது கூட தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்றமையை அவர் உடல்மொழி பலமுறை காட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தது. அதை மறைக்க கமல்ஹாசன் கைகள் பலமுறை அவர் pocket ற்குள் சரணடைந்திருந்தது. ஆம், கமல் அங்கு வேலை செய்வதால் விஜய் ரீவி சொல்வதை தானே செய்யவேண்டும் என்று சிலர் வாதிக்கலாம். ஆனால் கமல் அங்கு வேலை மட்டுமா செய்கிறார்? அரசியலும் தானே செய்கிறார். தன்னை அந்த வீட்டின் தலைவனாக மட்டுமன்றி நாட்டின் தலைவனாகவும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அத்தனை முயற்சியையும் அந்த மேடையிலும் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். அந்த நிலையில் ஒன்றில் தர்ஷனில் வெளியேற்றத்தை கடுமையாக எதிர்த்திருக்கலாம். குறைந்தபட்சம், மக்களால் தான் தர்ஷன் வெளியேறினான் என்ற பொய்யான பழியை மக்கள் மேல் சுமத்தாமல் இருந்திருக்கலாம். இவை இரண்டையும் கமல் செய்யவில்லை. அந்த இடத்திலேயே கமல் நேர்மையான ஒரு தலைவனாக தன்னை நிரூபிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தார். அவரின் வழமையான பாணியான நல்ல விடையங்களை தான் சொல்லி விஜய் ரீவி செய்ததாக கூறுவதும், மக்கள் எதிர்க்கும் விடையங்களில் விஜய் ரீவி மீது பழியை போட்டுவிட்டு தான் சம்பளத்துக்கு வேலைசெய்கிறேன் என்று ஓடிவிடுவதையும் தாண்டி இம்முறை வாய்கூசாமல் மக்கள் தலையில் பழியை போட்டது மிக அனியாயமாகவே பட்டது.

அன்றைய படப்பிடிப்பில் மக்கள் தர்ஷனுக்கு காட்டிய அசாத்தியமான அன்பும், கண்ணீரும், அன்றே சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பும் கமல்ஹாசனிடம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய நிலையாக,
தாமதிக்காமல் counter action ஏதாவது செய்தாகவேண்டும் இல்லையேல் மக்கள் தன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் என்ற பதட்டமே அடுத்தநாளே தர்ஷனை அவர் அலுவலகத்துக்கு அழைக்க வைத்தது. அந்த ஒரே இரவில் திட்டமிடப்பட்ட சதுரங்கவேட்டையில் மிகச்சிறப்பாக காய் நகர்த்தினார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேசனல் கம்பனியில் பிக்பாஸ் 3 புகழ் தர்ஷன் ஒரு "talent" ஆக உள்வாங்கப்பட்டார்.
ஆனால் தர்ஷனை வைத்து எடுப்பதற்கான எந்த கதையும் அந்த நேரம் தயாராக இருக்கவில்லை. அல்லது கமல்ஹாசனில் தற்போது படப்பிடிப்பு இடம்பெறும் இந்தியன் 2 இலும் தர்ஷனுக்கென்று எந்த பாத்திரமும் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் உலாவும் பல செய்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே. ஆக, ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் "Talent" என்று புதிதாக ஒரு கதையை அடித்து விட்டு, அதற்கென்று ஒரு batch ஐ தயார் செய்து அதை இறுதிநாள் மேடையில் வைத்து தர்ஷன் நெஞ்சில் ஒட்டி நல்லவனாக பிரமாதமாக நடித்தார் கமல்ஹாசன். அவர் தான் ஒரு உலக மகா நடிகன் என்பதை மறுபடியும் கோடிகாட்டினார். தர்ஷன் Talented என்பதை 95 நாளா பார்த்து உலகமே ஒத்துகொண்ட பின்னர் கமலின் நிறுவனம் "Talent" என்று தான் சின்னஞ்சூட்டுவது ஜனாதிபதி தேர்தலில் வென்ற மோடிக்கு, "ஜனாதிபதி" என்று ராஜ்கமல் இண்டர்நேஷனல் சின்னஞ்சூட்டுவது போலானதே.
அந்த நடிப்பில் வீழ்ந்த முதலில் அவரை திட்டிய பலரும் ஆகா ஓகோ என்று கமலை புகழ ஆரம்பித்தனர்.
இரண்டு கேள்விகளை இங்கே உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
1) ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இதுவரை இவ்வாறு எத்தனை "Talents" இவ்வாறு சின்னஞ்சூட்டப்பட்டு உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள். என் அறிவுக்கு எட்டியவரை, "என்னை ஒரு "talent" ஆக தன் நிறுவனத்தில் இணைத்து வளர்த்துவிட்டது ராஜ்கமல் இண்டர்நேஷனல்தான்" என்று எந்த புதுமுகமும் கூறியதாக நினைவில்லை.

2) கமலின் நிறுவனம் தான் வாய்ப்புக்கொடுக்கவேண்டும் என்கின்ற நிலையிலா தர்ஷன் இருக்கின்றான்? லைக்கா போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள் தர்ஷனை( ஈழத்தமிழன் என்பது மேலதிக தகுதி) வைத்து நிட்சயம் முன்வருவார்கள். ஆனால் முந்திக்கொண்டு கமல்ஹாசன் ராஜதந்திரமாக தர்ஷனுக்கு நல்லது செவ்வது போல பாவித்து தனக்கு 3 நன்மைகளை செய்துகொண்டார்.
1) தர்ஷனில் வெளியேற்றத்தில் உடந்தையாக இருந்து களங்கத்தை சரி செய்தல்.
2) தர்ஷனுக்கு இருக்கும் Market Value ஐ பயன்படுத்தி அவனைவைத்து எடுக்கப்போகும் முதல் படத்தில் லாபம் பார்ப்பது.
3) அவனுடைய market value வை மய்யத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்வது.

ஆக, இங்கே தர்ஷனை விட கமல்ஹாசனுக்குதான் இலாபம். ஆனால் தன் பேச்சுவன்மையால் கமல் ஏற்படுத்திய மாயை, ஏதோ கமல்தான் தர்ஷனுக்கு வாழ்வு கொடுத்தது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டது.
என்னைப்பொறுத்தவரை, தர்ஷன், ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிறப்பாக நடிக்கட்டும். அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது நல்லதுதான். அவன் ஜெயிப்பான். அது கமலால் அல்ல. அவன் கடும் உழைப்பால். ஆனால் தொடர்ச்சியாக கமல்ஹாசன் பின்னால் போய்க்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கவின் போல் தன் திட்டத்தில் தர்ஷன் இருக்கவேண்டும். கமல் போன்றவர்களின் சதுரங்கவேட்டையில் காய்களாக இருந்து கோட்டை விட்ட பிக்பாஸ் சாம்பியன் கிண்ணம் அவன் இறுதியாக ஏமாந்தாக இருக்கட்டும். ஆனால் மக்கள் ஆதரவு அவனை சிம்மாசனத்தில் இன்று இருத்தியுள்ளது.
கமல்ஹாசன் மேல் ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை குறைந்து வருவதற்கு காரணம் அவர் நாளடைவில் மிகச்சராசரியான அரசியல்வாதியாக மாறிக்கொண்டு வருவதே. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் கமலும் சீக்கிரம் வந்துவிடுவரோ என்ற ஆதங்கம் என்போல் பலருக்கு இன்னேரம் வந்திருக்கும். கமல் மொழியில் சொல்வதாயின், கமல் தன்மேல் உள்ள நம்பிக்கையை/நம்புபவர்களை வைத்து கீழ்தனமான அரசியல் செய்கிறார் என்று சொல்லவில்லை, அவ்வாறான கீழ்த்தனமான அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்று சொல்கிறேன்.

நன்றி.

தயா
09.10.2019
Powered by Blogger.