வைகோவை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜகவுடன் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வைகோவை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு வைகோவும் பதிலடி கொடுத்தார். இதனால் திமுக தலைமையிலான கூட்டணிக்குள் சலசலப்பு உண்டானது.
இதற்கிடையே நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாங்குநேரியில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸோடு முரண்பாடு கொண்ட வைகோ, நாங்குநேரி இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில் திருநெல்வேலியிலுள்ள வைகோவின் சகோதரர் இல்லத்தில் நேற்று (அக்டோபர் 11) வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, ‘நாங்க இன்னைக்கே போறதா இருந்தோம். நீங்க வர்றீங்கன்னு சொன்னவுடனே பார்த்துட்டு போலாம்னு இருந்துட்டோம்’ என்று கே.எஸ்.அழகிரி கூற, புன்னகை பூத்தார் வைகோ.
பின்னர், நாங்குநேரி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இடைத் தேர்தலில் ஆதரவு தெரிவித்ததற்காக வைகோவுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துக்கொண்டார். சந்திப்பின்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
காஷ்மீர் விவகாரத்தில் இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருந்த சூழலில், அதன்பிறகு தற்போதுதான் முதல்முதலாக சந்திக்கின்றனர். கசப்புகளை மறந்து மீண்டும் சந்தித்துள்ளதன் மூலம், மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.