திமுக, அதிமுக கேள்வி: பதில் கூற மறுத்த ரஜினி!

தலைமைக்கான வெற்றிடம் தொடர்பான அதிமுக, திமுகவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்வு கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு தனது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், தமிழக அரசியலில் இன்னும் வெற்றிடம் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “தமிழக அரசியலில் தற்போதும் சரியான ஆளுமைக்கான, தலைமைக்கான வெற்றிடம் உள்ளது” என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு விக்கிரவாண்டி பொதுக் கூட்டத்தில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் வெற்றிடம் உள்ளது என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது” என்று கூறியிருந்தார். இதுபோலவே திமுக பொருளாளர் துரைமுருகன், “ரஜினி சொல்லும் தலைமைக்கான வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி நீண்டகாலம் ஆகிவிட்டது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 10) செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவரோ, “அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை” என்று ஒரே வார்த்தையோடு முடித்துக்கொண்டு காரில் ஏறிப் புறப்பட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த ரஜினி ரசிகர்கள், ‘இருண்டுகிடக்கும் தமிழகத்தில் ஒளிவிளக்கே, தமிழகத்தின் கடைசி நம்பிக்கையே, எங்களின் உயிரே’ என்று முழக்கம் எழுப்பினர்.
தலைவர்கள் கருத்து
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவுமில்லை. அந்த வெற்றிடத்தை மக்கள்தான் நிரப்ப முடியும்.வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி சொல்கிறார் என்றால் அதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அளித்த பேட்டியில், “ஆளுமைக்குரிய தகுதிகள் என்னவென்று ரஜினி கூறுகிறார் என எனக்குத் தெரியவில்லை. எந்த அடிப்படையில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளதென கூறுகிறார் என்று ரஜினிகாந்த் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நடிகர் ரஜினி காந்த் கூறுவதை போல தமிழக அரசியலில் இன்னமும் வெற்றிடமுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.