அமமுகவை எதிர்த்து வழக்கு: அதிமுகவில் இணையும் புகழேந்தி!

ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணையவுள்ளதாக அமமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, தினகரனுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்துவந்த புகழேந்தி, அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவும் வலியுறுத்தினார். இதற்கிடையே கடந்த அக்டோபர் 25ஆம் தேதி சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த புகழேந்தி, இடைத் தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவிக்க வந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர் அதிமுகவில் இணையவந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் அமமுக எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து ‘மாங்கனி நகரில் மாறுதல் காண்போம்- சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை’ என்ற பெயரில் புகழேந்தி தலைமையில் இன்று (நவம்பர் 10) சேலம் ரேடிசன் ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றியை அதிமுகவுக்கு வெற்றியை ஈட்டித்தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும அமைச்சர்கள், அதிமுகவினர், கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது என வலியுறுத்தியும், தேவைப்பட்டால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர புகழேந்திக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தினகரனை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் தினகரனின் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்து விடும். அமமுக காணாமல் போய் விடும். எனவே பதிவு பெறாத ஒரு சங்கத்தைப்போல டிடிவி தினகரன் நடத்தி வரும் அமமுக என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண்போக வேண்டாம்.தினகரன் கழக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது கழகத்தை காப்பாற்றுவார் என்று நம்பி அவர் பின்னால் அணி வகுத்தோம். ஆனால் தனது சுயநலத்தாலும், ஆளுமை இன்மையாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் துணை பொதுச் செயலாளர் பதவியையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.அவரை நம்பி அவர் பின்னால் சென்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காப்பாற்ற முடியவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தினகரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில் பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பப்படி தமிழகம் முழுவதும் நம்மோடு இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று அனைவரும் அதிமுகவில் இணைவது என இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “நல்ல மனிதரான எடப்பாடியின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்கிற ஜெயலலிதாவின் உறுதிமொழிக்கு ஏற்ப தாய்வீடான அதிமுகவில் இணைந்து செயல்படுவதென முடிவு செய்திருக்கிறோம். குமரியிலிருந்து தமிழகம் முழுவதும் இதே நிலைதான். என்னை சந்திக்கும் மக்களெல்லாம் தினகரனை விட்டுவிட்டு அதிமுகவில் இணைந்து செயல்படுங்கள், இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று கூறினர். ஆகவே மக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு மனமகிழ்வோடு அதிமுகவுடன் இணையும் முடிவை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.