இரும்பு பூக்களின் இதய கானம் - சிறுகதை!!
பேருந்து நிலையத்தில் கூட்டம் முண்டியடித்தது. பெரும்பாலானவர்களின் முகங்களில் வலியின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது. ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொருவகை நினைவுகள் ஊசலாடிக்கொண்டிருக்கலாம். மகனை, தம்பியை அண்ணனை, மகளை, சகோதரியை, காதலனை, காதலியை என தமக்கான உறவுகளை...இல்லை இல்லை...கல்லறைகளை...அட, அதுவும் இப்போது இல்லையே, அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தினைக் காண்பதற்காக அவளைப்போலவே இவர்களும் புறப்படுகினரோ?
கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றுகொண்டிருந்தேன். லேசாகத் தலைசுற்றுவது போல இருந்தது, வயது நாற்பத்தைந்தைக் கடந்துவிட்டது. இனி எல்லா வருத்தமும் வரத்தானே செய்யும். பேருந்து நிறுத்தத்தில் நின்று பார்க்க யாழ்ப்பாணம் பொதுவைத்தியசாலை தெரிந்தது. வைத்தியசாலையைப் பார்த்ததும் என் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. என் முழு நேரமும் அங்கே தானே கழிகிறது, இன்று வேலைக்கு ஓய்வு, அதுவும் இப்படி ஒரு அவசரவேலை இல்லாவிட்டால் இந்தப்பொழுதும் அங்கேதான் கழிந்திருக்கும். அங்கேதான், பிரதம செவிலியராக கடமை புரிகின்றேன். இந்த வைத்தியசாலைக்கு வந்து பத்து வருடங்கள் ஆயிற்று, கடமை நேரங்களில் மற்ற எல்லாவற்றையும் மறந்து அதிலேயே மூழ்கிவிட்டாலும் ஏனைய நேரங்களில் சில நினைவுகள் மனதை அரிப்பதை தடுக்கமுடிவதில்லை.
பெருமூச்சோடு சுற்றிப் பார்த்தேன், அங்கு நின்றவர்களில் ஓரிருவர் தெரிந்தவர்கள் தான், ஆனால், எல்லோருமே பார்த்ததும் புன்னகைப்பதுபோல தெரிந்தது. அதிகமானவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்தது. எனக்கு அவர்களைத் தெரியவில்லை. மருந்தைவிட இனிமையான வார்த்தைகளுக்கு மகத்துவம் அதிகம் என்று நினைப்பவள் நான், அதனால்தானோ என்னவோ, எங்கு சென்றாலும் புன்னகை முகங்களை பார்க்கின்ற பெருவரம் கிடைக்கிறது.....எத்தனை பேரை கண்டு கடக்கிறோம் இந்த வாழ்க்கையில்.....
காலம் எத்தனை விதமான அனுபவங்களையும் நினைவுகளையும் மனதில் தந்துவிடுகிறது. தூரத்தில் தாதியர் பயிற்சிக்கல்லூரி, மாணவர்கள் குழுமி நிற்பது தெரிந்தது. இத்தனை வயது கடந்துவிட்ட பின்னரும் கூட, தாதியத்தொழிலைக் கற்கமுடியவில்லையே, என்ற ஏக்கம் என் மனதின் ஆழத்தில் இல்லாமல் இல்லை.
எட்டாம் தரத்தில் புளோறன்ஸ் நைற்றிங்கேலின் கதையைப் படித்துவிட்டு தாதித்தொழிலின் மீது ஆர்வம் கொண்டு, நாளாவட்டத்தில் அந்த ஆசையை மனதில் ஆளமாகப் பதித்துக்கொண்டேன் எனினும், வீட்டுச்சூழல் தாதித்தொழிலைக் கற்கமுடியாமல் செய்துவிட்டது. வீட்டு வறுமையும், நாட்டுச்சூழலுமாய் படிப்பை பாதியிலேயே நிறுத்துமாறு செய்துவிட்டது. சாதாரண தரத்தில் திறமையான பெறுபேறுகள் பெற்றபோதும், உயர்தரம் கற்கமுடியவில்லை, குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய சூழலில், புத்தக பாரத்தை நான் தள்ளிவைத்துவிட்டேனே.....
யாழ்ப்பாணம் .....- புதுக்குடியிருப்பு... நடத்துனரின் கூவலோடு பேருந்துச் சத்தம் கேட்டதும் அவசரமாய் ஏறி யன்னலோர இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். உடனேயே பேருந்து புறப்பட்டும் விட்டது. மெல்லிய குளிரோடு கலந்த இதமான காற்று சில்லென்று வீசியது.
இப்படி ஒரு கார்த்திகை மாதத்தில்தான் நாங்கள் இடம்பெயர்ந்து போனது, இப்படி ஒரு கார்த்திகை மாதத்தில் தான் முதல்முதலில் கலைப்பரிதியை சந்தித்தது. இப்படி ஒரு கார்த்திகை மாதத்தில்தான் அவர் வீரச்சாவு அடைந்ததும்....முகத்தில் மோதிய இந்த மெல்லிய காற்றில் என் நினைவுகளும் உடைப்பெடுக்கத்தொடங்கின.
ஆம்......வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் உள்ள பொலிகண்டி தான் எங்கள் சொந்த இடம். அப்பா கடற்தொழில் செய்பவர், அம்மா வீட்டுப்பணி, அந்தக் குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்தவள் நான். எனக்குப் பின்னர் ஐந்து பிள்ளைகள். இரண்டு தம்பிமாரும் மூன்று தங்கைகளும்..... கடைசித் தம்பி பிறந்த போது நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்......ஒரு மழையிரவில்தான் அவன் பிறந்தான்.
அன்று காலையில் இருந்தே அம்மாவின் முகம் அதிக பிரகாசமாய் இருப்பது போல எனக்கு தெரிந்தது. மாலையில் ஷெல் அடி தொடங்கிவிட்டது. அந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு வயித்துக்குத்து, வந்துவிட்டது. அப்பா என்ன செய்வது எனத்தெரியாமல், தவித்தபடி நின்றார், ஏனென்றால், அந்த நேரம் பலாலியில் இருந்து வீசிய எறிகணைகள் சரமாரியாய்....வெடித்துக்கொண்டிருந்தன. யாரும் வெளியே போகமுடியாது, அப்பா எங்கள் ஆறுபேரையும் சமையலறையின் ஒரு பக்க பிளாற்றுக்கு கீழே இருத்திவிட்டு, அடுத்த பக்கத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டுவந்து இருக்கச்செய்தார். அம்மா.....வலியில் அலறிக் கொண்டிருந்தது எங்களுக்கு கேட்டபடியே இருந்தது.
"தாங்கமுடியேல்லையப்பா......"அப்பாவின் கையை இறுகப்பற்றிக்கொண்டு அம்மா துடித்ததை நான் மெல்ல எட்டிப் பார்த்தேன், அம்மாவின் தலையைத் தடவியபடி, அப்பா ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.
"பொறப்பா..கொஞ்சம் பொறுத்துக்கொள்......செல்லடி நிண்டதும் ஆசுப்பத்திரிக்கு போவம்....இப்ப வெளியில போகேலாது......"
அப்பா சொல்வதை கேட்கும் நிலைமையில் அம்மா இல்லை, அம்மா துடித்தபடி.....அரற்றிக்கொண்டே இருந்தா. திடீரென்று அம்மா மயங்கிச் சரியத்தொடங்க, அப்பா....தட்டி எழுப்புற சத்தம் கேட்டது.
நானும் எட்டிப் பாத்தன், "என்னப்பா.....?" நான் கத்தினதைக் கண்டதும், "ஒண்டுமில்லை, எண்டவர், தண்ணிதெளிச்சு அம்மா மெல்ல கண் திறந்ததும், நீ அம்மாவுக்கு பக்கத்தில இரு, நான், ஒருக்கா வெளியில போட்டுவாறன்," எண்டு சொல்லிப்போட்டு வெளியில போட்டார்.
அம்மா கதறித் துடிச்சதைப் பாக்க எனக்கு கவலையா இருந்தது. அம்மாவின்ர கையை இறுக்கமா பிடிச்சுக்கொண்டிருந்தன். கொஞ்ச நேரத்தில அப்பா வந்திட்டார், ரெண்டு தெரு தள்ளி இருக்கிற பாட்டியைக் கூட்டிக்கொண்டு வந்தவர், என்னை அடுத்த பக்கத்து பிளாற்றுக்குள்ள அனுப்பிபோட்டு, அவரும் பாட்டியுமா அம்மாவை சின்னறைக்கு கூட்டிக்கொண்டு போயிட்டினம், ஒருத்தரும் வெளியில வரக்கூடாது எண்டு அப்பா கண்டிப்பா சொன்னதால நானும், மற்றவையளும் உள்ளயே இருந்திட்டம்.
அப்பா, சமையலறைக்குள்ள வாறதும் அறைக்கு வெளியில போய் நிக்கிறதுமா இருந்தார், அந்த பரபரப்பான நேரத்தில, நாங்களும் வெலவெலத்துப்போய் பாத்துக்கொண்டிருந்தமே தவிர வெளியில வரவேயில்லை.
கொஞ்ச நேரத்தில, குழந்தை அழுகிற சத்தம் கேட்டது, தங்கச்சிமார் போக எழும்ப, நான் விடயில்ல, "அப்பா பேசுவார், இருங்கோ" எண்டு மறிச்சுப்போட்டன்,
ஒரு பத்து நிமிசம் போயிருக்கும், பாட்டி கத்திற சத்தம் கேட்டது,
"டேய்....டேவிற்.....கெதியா வாடா....." அப்பா பதறி அடிச்சுக்கொண்டு கதவைத்திறந்து உள்ள ஓடினதைக்கண்டம்,
அம்மாவிடம் பேச்சுமூச்சு இல்லை. அவசரஅவசரமா அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக, நாங்கள் ஆறுபேரும் அப்பிடியே பிளாற்றுக்குள்ள இருந்திட்டம். போன வேகத்தில அப்பா கதறினபடி அம்மாவை பிணமாத்தான் கொண்டு வந்தவர். முதலில ஓடின என்னை கட்டிப்பிடிச்சு அப்பா கத்தியது இப்ப மாதிரி செவிப்பறையில் ஒலித்தது.
"கானகி..கானுமா...அம்மா போயிட்டாள்....எங்கள் எல்லாரையும விட்டிட்டு அம்மா....போயிட்டாள்...."
பதினேழு வயதில், அம்மாவின் இழப்பென்பது எத்தனை பெரிய கொடுமை என்பதை வாழ்ந்து அனுபவித்தவள் நான்.....அதுக்குப்பிறகு, நான் படிப்பை விட்டிட்டு வீட்டிலயே இருந்திட்டன். அப்பாவும் நானும்தான் கடைசித்தம்பியை பாத்துக்கொண்டது. புட்டிப்பாலிலயே வளந்தவன் அவன். மூண்டு வருசம் ஓடிப்போச்சுது, இடப்பெயர்வு...வன்னிக்கு போயிட்டம், அங்க போனதும், தருமபுரம் வைத்தியசாலையில வேலை செய்யிற ஒருத்தர் அப்பான்ர நண்பர், அவர் மூலமா அந்த ஆஸ்பத்திரியில செவிலியர் வேலைக்குப் போனன், அதில வந்த உதவித்தொகையோட, அப்பா சுண்டிக்குளம் கடற்கரைக்கு மீனுக்கு போய் கொண்டுவாற காசையும் வைத்சுத்தான் குடும்பத்தை பாத்துக்கொண்டன்.
அந்த நேரத்தில, கையில காசில்லாட்டியும் வறுமை இருக்காது, அயலில, அக்கம் பக்கத்தில இருக்கிறவையள், தேங்காயோ, நெல்லோ, மரக்கறியோ ஏதோ ஒண்டு தருவினம், எதையாவது செய்து சாப்பிட்டுவிடுறது வழமை,
நாங்களும் அப்பா கொண்டுவாற மீன், கருவாடு அவையளுக்கும் குடுப்பம், ஒரு வீட்டில உலை எரியாட்டியும் மற்ற வீடுகளில இருந்து சாப்பாடு செய்து தந்திடுவினம், அடிக்கடி மரவள்ளிக்கிழங்கும் சம்பலும் தான் காலைச்சாப்பாடு. அது ஒரு பொன்னான காலம் எண்டுதான் நினைக்கத் தோன்றியது எனக்கு. அந்த பொற்காலத்தில எனக்கு அறிமுகமானவர் தான், கலைப்பரிதி. பெரிய மூச்சொன்று வெளிப்பட்டு மறைந்தது என்னிடம்.
நாங்கள் இடம்பெயர்ந்துபோய் நாலு வருசமாச்சு, தம்பி ஒருத்தனும் நாட்டுக்காக போராடப் போய்விட்டான். நானும் எனக்கு அடுத்த தங்கையும் ஆஸ்பத்திரியில வேலை செய்துகொண்டிருந்தம், அந்த நேரம் எங்கட ஆஸ்பத்திரிக்கு, வைத்தியரா வந்த போராளிதான் கலைப்பரிதி.
அவருக்கு உதவியா பல நேரங்களில பக்கத்தில நிண்டு வேலை செய்திருக்கிறன், அப்ப எல்லாம் அவர் பாக்கிற பார்வையில ஒரு மரியாதையும் பெருமிதமும் இருக்கும், நானும், அவரில நிறைய மதிப்பு வைச்சிருந்தது உண்மைதான். அவர் வந்து ஆறுமாசம் ஆச்சு, அங்க வேலை செய்த எல்லாரிட்டையும் நல்ல அன்போடயும் பணிவோடையும்தான் கதைப்பார், சின்னப்பிள்ளையள் வருத்தம் எண்டு வந்திட்டா, தனக்கு பக்கத்தில வைச்சிருந்து கதைகேட்டபடி அவர், வைத்தியம் பாக்கிறதைப் பாத்தா உண்மையாவே நெகிழ்ச்சியா இருக்கும், கூட வேலை செய்யிற பிள்ளையள், "கலைப்பரிதி அண்ணா, இவ்வளவு நாளும் கனிவெண்டா, கானகி அக்காதான் எண்டு நினைச்சம், இப்ப அதை தட்டி, நீங்கள் முன்னுக்கு வந்திட்டிள்" எண்டு சொல்லுவினம்.
அவர் வந்த புதிசில, அவர, டொக்ரர் எண்டு சொல்ல, பிள்ளையளைக் கூப்பிட்டு, 'என்னை அப்பிடிச் சொல்லவேண்டாம், நீங்கள் அண்ணா எண்டு சொல்லுறதுதான் எனக்கு சந்தோசம் எண்டு சொல்லிப்போட்டார்.' அதுக்குப்பிறகு எல்லாருக்கும் கலைப்பரிதி அண்ணா தான். நானும் அப்பிடிச் சொல்ல ஆரம்பிக்க, வேண்டாம், எண்டு தலையை அசைச்சது .......இப்பவும் கண்ணில நிக்கிது.
அவர், தருமபுரம் பள்ளிக்குடத்துக்கு பக்கத்தில இருந்த பேசில தான் இருந்தவர். சரியா 8.30க்கு அறையில இருப்பார், மாலையில பெரிய டொக்ரர் போன பிறகும் நிண்டு, ஒரு தரம் வாட்டில நிக்கிற எல்லாரையும் பாத்திட்டுத்தான் போவார். ஒரு அர்ப்பணிப்புள்ள வைத்தியரா, கடமையில தவறாத போராளியா அவரைப் பாக்க மகிழ்ச்சியா இருக்கும்.
ஆனால்..அவருக்குள்ள என்னில விருப்பம் இருக்கிறது எண்டு நான் தெரிஞ்சு கொண்டபோது என்னால அதை ஏற்கமுடியேல்ல, காரணம்.....என்னுடைய குடும்ப நிலைமைதான். நான் கலியாணம், குடும்பம் எண்டு போயிட்டால், அம்மா என்னட்ட விட்டிட்டுப்போன குடும்ப பொறுப்பு?????
ஒருநாள், நான் இரவுப்பணி எண்டதால ஆறு மணிபோல வேலைக்குப் போக, அவரும் அங்க நிக்கிறார். அந்த நேரம்தான் கரிப்பட்டமுறிப்பு சண்டையில காயப்பட்ட போராளிகள் சில பேரை அங்க கொண்டு வந்து விட்டிருந்தவை. நானும் அந்த அண்ணாக்கள் ஒவ்வொருத்தரையும், பாத்து பாத்து கவனிச்சுக்கொள்ளுறது வழமை, பக்கத்து அன்ரியின்ர தென்னங்காணியில, நிறைய இளநி இருந்ததால, அவையட்ட சொல்லிப்போட்டு பிடுங்கி கொண்டுபோய் அந்த அண்ணாக்களுக்கு குடுக்கிறதுண்டு.
அப்பிடித்தான் அண்டைக்கும் பத்து இளநி வெட்டி, போத்தலில விட்டுக்கொண்டு போனன்.
கலைப்பரிதி டொக்ரரும் அங்கதான் நிண்டவர், நான் ஒவ்வொருத்தருக்கா இளநி குடுக்க, அவர் பாத்துக்கொண்டு நின்றார். நான் எல்லாருக்கும் குடுத்து முடிச்சிட்டு, வர, "எனக்கும் தாகமா இருக்கு" என்றார்.
நானும் அவசரமா மிச்சமிருந்த இளநியை கப்பில விட்டு அவரிட்ட குடுத்தன், குடிச்சிட்டு, எதுவும் சொல்லாமல் போய் கதிரையில இருந்திட்டார். நானும் என்ர வேலையைப் பாக்க போயிட்டன்.
எட்டு மணியிருக்கும், பேசன்ருக்கு குடுக்கவேண்டிய மருந்துகளை எடுத்துக்கொண்டு, வருவம் எண்டு, மருந்து அறைக்கு போயிட்டு திரும்பி வர, வாசலில நிண்டவர், "கானகி, நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும், மருந்துகளை வைச்சிட்டு, வாங்கோ" என்றார். வாட்டோட வெளியில வாங்கில் இருந்தது. நான் வந்ததும், "இருங்கோ" என்றார்.
நான், நிண்டபடி, "பரவாயில்லை டொக்ரர், சொல்லுங்கோ" எண்டன்.
"கானகி, நான் ....என்ர இடம், மட்டக்களப்பு, வாகரை. பழைய கிராமம். எனக்கு அப்பா அம்மா ரெண்டுபேரும் இல்லை, ஆமி சுட்டு செத்திட்டினம், பாட்டியோடதான் வளந்தனான், ஏதோ கிழவி பத்தாம் வகுப்பு மட்டும் படிப்பிச்சது," சொல்லிவிட்டு சிரித்தார்.
நான் கேள்வியாய் பார்த்தேன்......"கிழவிக்கு என்னில சரியான பாசம், கடைக்குட்டி எண்டு...., அண்ணாவும் அக்காவும் இருக்கினம், ரெண்டுபேரும் போராளிகள் தான், அண்ணா பயிற்சி மாஸ்ரர். போராளி அக்கா ஒருத்தரை கலியாணம் செய்திருக்கிறார். அக்கா, கை ஒண்டும் கால் ஒண்டும் இல்லாததால நவம் அறிவுக்கூடத்தில இருக்கிறா. நானும் போராட வந்து எட்டு வருசமாச்சு, எனக்கு மருத்துவ துறையில விருப்பம் எண்டதால பொறுப்பாளர் அண்ணா மெடிசின் படிக்க அனுப்பிபோட்டார். சண்டைபிடிச்சுதான் சண்டைக்கு போறனான்.
இதுவரைக்கும் எனக்கு இப்பிடி ஒரு விருப்பம் யாரிலையும் வரேல்ல, இப்ப முதல் முதலா உங்களில வந்திருக்கு, உங்கட கனிவு, குடும்ப பாரத்தை சுமக்கிற துணிவு. தன்னம்பிக்கை, எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு, எனக்கு மனைவியா ஒருத்தி வாறதெண்டா உங்கள மாதிரி ஒருத்திதான் வரவேணும் எண்டுதான் விரும்புறன், கலியாணத்துக்குப்பிறகும் நீங்கள் உங்கட வீட்டில, உங்கட குடும்பத்தை பாத்துக்கொண்டு இருக்கலாம், உங்கட முடிவைக்கேட்டுத்தான் என்ர பொறுப்பாளர் அண்ணாட்ட அறிவிக்கவேணும், என்ன சொல்லுறீங்கள்......"
எனக்கு என்ன சொல்லுறது எண்டே தெரியேல்ல, "அது...நான்......நான்....கலியாணமே செய்யிறேல்ல எண்ட முடிவில இருக்கிறன், தயவு செய்து இனிமே இப்பிடி கதைக்காதேங்கோ," என்றுவிட்டு விரைந்து சென்றுவிட்டேன்.
மறுநாள் கடமையில் இருந்தபோது அவர் எதுவுமே சொல்லவில்லை, ஏன் அதன் பின்னர் அங்கே பணிசெய்த நான்கு மாதமும் கூட அவர் அதைப்பற்றி கதைக்கவேயில்லை. எனக்கு ஆரம்பத்தில் அவரது மௌனம் பற்றி எதுவும் தோன்றாதபோதும் காலப்போக்கில், அந்த மௌனம் சித்திரவதையாக இருந்தது. ஆனாலும் என் குடும்ப பாரத்தை மனதில் எண்ணி நான் மௌனமாகவே இருந்துவிட்டேன்.
ஒருநாள், நான் வீட்டிற்கு வர அவர், எங்கள் வீட்டில் அப்பாவுடன் கதைத்துக் கொண்டிருப்பதைக் காணவும், 'என்னடா' என்றிருந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் வேதனையாகவும் இருந்தது. எங்கள் விடயமாகத்தான் கதைக்கிறாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர், தங்கையின் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருப்பது பேச்சுபோக்கில் கேட்டது.
அவரது பேசில் நின்ற போராளி தமிழ்மாறனிற்கு என் தங்கையைத் திருமணம் செய்யகேட்டிருந்தார், தங்கைக்கும் பிடித்துப் போக, பொறுப்பாளரிடம் அறிவித்து அடுத்த மாதமே அவர்களின் திருமணம் எளிமையாய் நடந்து முடிந்தது. அப்போது கூட அவர், என்னிடம் பேசவில்லை. அதற்குப்பின் அவர் வைத்தியசாலைப்பணிக்கு வரவும் இல்லை.
அதன் பின்னர், ஒருநாள், திடீரென்று வந்தவர், "கானகி," என்றார். நிமிர்ந்து பார்த்தேன்...ஆச்சரியம் தாங்கவில்லை எனக்கு. வார்த்தைகள் வரமறுத்த்து. மென்று விழுங்கினேன்.
"சொறி...உங்களை கரைச்சல் படுத்த வரேல்ல, நான் சண்டைக்கு போகப்போறன், அதுதான் சொல்லிப்போட்டு,..... சிலவேளை நான் வீரச்சாவு அடைஞ்சா, எனக்கு எக்சோறா பூவில மாலை கட்டிக்கொண்டுவந்து போடுங்கோ, எனக்கு அந்தப்பூ பிடிக்கும்" என்றதும் எனக்கு கைகால் நடுங்கத் தொடங்கியது.
அவரிடம் ஏதேதோ பேசவேண்டும் போல இருந்தது, அவர் நிற்கவில்லை, கையசைத்தபடி ஓடிச்சென்றுவிட்டார்.
அதன் பிறகு ஒரு நான்கு நாட்களில் அவர் வீரச்சாவு என்ற செய்திதான் எனக்கு கிடைத்தது. வெளியே யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாத வலியோடு கதறினேன், துடித்தேன்.....எக்சோறாப்பூவில் மாலை கட்டிக்கொண்டுபோய் அவரது வித்துடலுக்கு போட்டுவிட்டு மௌனமாய் அழுதுவிட்டு வந்தேன்.
அன்றோடு என்னுயிரில் ஒருபாதி போய்விட்டதாகத்தான் இன்று வரை உணர்கிறேன். கையில் சரசரத்த பையை மெதுவாக தூக்கிப் பார்த்தேன்...எக்ஸோறா பூமாலை, அவருக்கு பிடித்தது. வித்துடல் இல்லாவிட்டாலும் விதைத்த இடத்திலேனும் வைத்து அஞ்சலித்துவிட்டு வரவேண்டும் என எண்ணியபடி கொண்டு செல்கிறேன்.
காற்று வேகமாய் முகத்தில் மோதியது, எனக்கென்னவோ அந்தக் காற்றிலும் அவரது மெல்லிய சத்தம் கேட்பது போலவே தோன்றியது. இன்று நானும் அப்பாவும் மட்டும்தான் ஊரில் இருப்பது. சகோதரர்கள் எல்லோரும் வெளிநாட்டில்தான். என்னையும் வரச்சொன்னபடிதான்,
ஆனாலும் அவரோடு கலந்த அந்த நினைவுகளை இந்த மண்ணில் விட்டுவிட்டு என்னால் போகமுடியவில்லை, அவர் நேசித்த பணி, அவர் நேசித்த மண், அவர் நேசித்த மக்கள் இவை மூன்றோடும் நகர்கிறது என் நாட்கள்.
முற்றும்.
தமிழரசி,
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


.jpeg
)





கருத்துகள் இல்லை