புதிய உள்துறைச் செயலாளர் நியமனம்!
தமிழகத்தின் புதிய உள் துறைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் உள் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி இன்று (நவம்பர் 30) ஓய்வு பெற்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வசம் இருக்கும் துறைகளில் முக்கிய துறையான உள்துறைச் செயலாளர் என்பதாலும், தலைமைச் செயலாளருக்கு அடுத்த அதிகாரமிக்க பதவி என்பதாலும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே புதிய உள் துறைச் செயலாளர் யார் என்ற விவாதம் அதிகாரிகள் மட்டத்தில் எழுந்தது.
இதுதொடர்பாக நாம் புதிய உள்துறைச் செயலாளர்: கோட்டையில் கொங்கு லாபி! என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஏற்கனவே உள் துறைச் செயலாளராக இருந்த அபூர்வா வர்மா உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் உள் துறைச் செயலாளருக்கான பரிந்துரையில் இருந்துவந்தது.
இந்த நிலையில் முதல்வர் வகிக்கும் துறையான நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகர் மற்றும் பொது மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலாளராகவும், முதல்வரின் செயலாளர் (III) ஆகவும் இருக்கும் டாக்டர் செந்தில்குமார் ஐஏஎஸ் பெயரும் உள்துறை செயலாளர் பதவிக்கு அடிபடுவதாக கோட்டையில் இருக்கும் கொங்கு அதிகாரிகள் மத்தியில் பேச்சிருக்கிறது” என்று சொல்லியிருந்தோம்.
இந்த நிலையில் எஸ்.கே.பிரபாகரை உள்துறைச் செயலாளராக நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உள் துறைச் செயலாளராக இன்று பிற்பகல் பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரபாகர், பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தகவல் தொழில்நுட்பவியல் துறை, வணிகவரித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளுக்கு செயலாளராக பணியாற்றியுள்ளார். கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரது செயலாளர்-4 ஆக இருந்துள்ளார். மேலும், பல மாவட்டங்களுக்கு ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார். பிரபாகர் வரும் 2026ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஓய்வு பெற்றதை முன்னிட்டு உள் துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி, முதல்வர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்துபெற்றார்.
கருத்துகள் இல்லை