கூகுளுக்கு கம்பெனியைத் தந்தாலும் டேட்டாவைத் தர மாட்டோம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிட்பிட் (fitbit) நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உடலின் இயக்கங்களைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்சுகள் தற்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம், சீன நிறுவனங்களான எம்.ஐ, ஹுவாய் போன்றவை இத்தகைய கைக்கடிகாரங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டியும் நிலவி வருகிறது.
அந்த வரிசையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிட்பிட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது. உடல்நிலை மற்றும் ஃபிட்னஸ்ஸைக் கண்காணிக்கும் ஃபிட்பிட் நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் மிகவும் புகழ்பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தை 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு (2.1 பில்லியன் டாலர்கள்) கூகுள் விலைக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஃபிட்பிட் நிறுவனம், தங்களிடமுள்ள வாடிக்கையாளர்களின் உடல்நிலை தொடர்பான விவரங்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது. அதற்கு இணங்க ஃபிட்பிட் நிறுவன வாடிக்கையாளர்களின் விவரங்கள் எதுவும் பயன்படுத்தப்படாது என கூகுள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் விவரங்கள் எதையும் பயன்படுத்த இயலாத பட்சத்தில் கூகுள் எதற்காக ஃபிட்பிட் நிறுவனத்தை வாங்கியுள்ளது என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. மிகச் சிறந்த ஹார்ட்வேர் அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஃபிட்பிட்டால் ஆப்பிள் நிறுவனத்தைப் போன்ற சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இயலவில்லை. அதற்கு ஏற்ற சாஃப்ட்வேர் அவர்களிடம் இல்லாமல் இருந்தது. அதே போன்று சிறந்த சாஃப்ட்வேரைக் கொண்டிருந்தாலும் அதனைச் சரிவர பயன்படுத்தும்படியான ஹார்ட்வேர் கூகுளிடம் இல்லை.
ஃபிட்பிட்டை கூகுள் வாங்குவதன் மூலமாக மிகச் சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தர முடியும் என நம்புகிறது. அதன் மூலமாக பிற போட்டி நிறுவனங்களை முந்தவேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூகுள், ஃபிட்பிட்டை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஃபாசில் (Fossil) நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பத்தை, கூகுள் 282 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.