சீரற்ற காலநிலையால் மண் மற்றும் கற்பாறை சரிவுகள்!!

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண் மற்றும் கற்பாறை சரிவுகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.


இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமும் மாலைவேளைகளில் பதுளை மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே மண்சரிவுகளும், மலைகளிலிருந்து கற்கள் உருண்டு விழும் அபாயமும் காணப்படுகின்றது.

இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அபாய பகுதிகளிலுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

மேலும் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்களும், மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆறுகளும் பெருக்கெடுக்கும் நிலை காணப்படுவதினால், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் கேட்கப்பட்டுள்ளார்.

கடும் பனிமூட்டங்கள் பாதைகளில் காணப்படுவதால், வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கடும் மழையைத் தொடர்ந்து, பதுளை மாவட்டத்தில் 73 டெங்கு நோயாளார்கள் இனம்காணப்பட்டுள்ளதாக பதுளை அரசினர் மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பதுளை அரசினர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அநேகமானோர் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குனரட்ன தலைமையில் ஊவா மாகாண சபை செயலாளர் பி.பி.விஜயரட்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, பதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்ற பிரதி ஆணையாளர் மங்கள விஜயநாயக்க, பதுளை மாநகர சபையினர் பதுளைப் பொலிஸாருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய நேற்றைய தினம் 2521 வீடுகள் சோதனையிடப்பட்டன. இவற்றில் 136 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களாக இனம்காணப்பட்டுள்ளதுடன், உரிமையாளர்களுக்கெதிராக மஞ்சள் அறிவிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பதுளையில் நான்கு கல்வி நிறுவனங்கள், ஐந்து வீடுகள் ஆகியவற்றுக்கெதிராக பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.