வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் சோதனை!

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளதுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.


தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 2 மணியளவில் முகாமையாளரின் வீட்டு வளவுக்குள் மதில் ஏறிப் பாய்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்துள்ளனர்.

11 பொலிஸ் உத்தியோகத்தர்களில் 6 பேர் வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தி உள்ளனர்.

எனினும் பொலிஸார் அத்துமீறி வீட்டு வளவுக்குள் வந்தனர் என்றும் வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டேன் என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸார் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.

வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் பயணித்த ஜீப் வாகனம் அங்கு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் நீதிமன்ற அனுமதியின்றி வீட்டை சோதனையிட அனுமதிக்கமாட்டேன் என முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முகாமையாளரின் வீட்டைச் சோதனையிடுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதி பெற்றனர். அதன் அடிப்படையில் வீடு சோதனையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று நண்பகல் 12 மணியளவில் முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“பொலிஸார் உரியவாறு எனது வீட்டை சோதனையிடக் கோரியிருந்தால் அனுமதியளித்திருப்பேன். அதிகாலை 2 மணிக்கு வீட்டு மதில் பாய்ந்து உள்நுழைந்து எனது வீட்டுக் கதவைத் தட்டிய பொலிஸாரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வங்கி முகாமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.