கொந்தளித்த திமுக!

ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி ஊடக விவாதத்தில் கலந்துகொண்ட பொன்முடியிடம் நெறியாளர் ஒருவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லையே என்று என்று கேள்வி எழுப்ப இந்த விவகாரம் சர்ச்சையானது. ஆனால், தன்னுடன் தான் மிசாவில் ஸ்டாலின் சிறையில் இருந்தார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விளக்கம் அளித்திருந்தார்.
பாண்டியராஜன் பேட்டி
இந்த நிலையில் நமது அம்மா பத்திரிகைக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை. மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்ததற்காக அடிக்கவில்லை. அவருடைய தவறான செய்கைகளுக்காக அடிவாங்கினார் என எல்லோரும் சொல்கிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
உருவபொம்மை எரிப்பு
மாஃபா பாண்டியராஜனின் இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கடுமையாக விமர்சனம் செய்து திமுகவினர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக சென்னையின் பல இடங்களில் இன்று (நவம்பர் 6) திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய திமுகவினர், அவரது உருவபொம்மையையும் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதுபோலவே சென்னையில் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல், தான் வகிக்கின்ற அரசுப் பொறுப்பு மற்றும் தனி நபர் பொறுப்புக்களை எல்லாம் துச்சமென தூக்கியெறிந்து விட்டு உண்மைக்குப் புறம்பான, எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டத்தை போகிற போக்கில் அள்ளி வீசி விட்டு ஸ்டாலின் மீது சேற்றினை வாரி இறைக்கும் விதமாக, மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்திருக்கின்றார் மாஃபா பாண்டியராஜன்” என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, “இது தலைமையை எப்படியாவது தாஜா செய்து இன்னும் ஏதாவது பெரிய துறையில் கைவைக்க முடியாதா என்ற அரிப்பின் வெளிப்பாடே ஆகும். அரசியல் என்பதே வியாபாரம் என்றும் அதில் தான் இருக்கும் ஒவ்வொரு நாளும் என்ன லாபம் என்று கணக்குப் போடும் பாண்டியராஜனின் கடந்த காலம் போன்றதல்ல ஸ்டாலின் வரலாறு” என்று கூறியுள்ள தங்கம் தென்னரசு, மாஃபா பாண்டியராஜனை அரசியல் வியாபாரி என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், “திமுகவினரை உசுப்புவது, தூங்குகின்ற புலியை இடறுவதற்கு சமம் என்பதை உணர்ந்து வாய்த்துடுக்கை அடக்கி பாண்டியராஜன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையேல் கழகம் ஜனநாயக வழியில் எப்படி இத்தகைய அடாவடித்தனத்தை எதிர் கொள்ள வேண்டுமோ அதற்கு தயராகவே இருக்கின்றது” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.