சோனியா காந்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு குறைப்பு!

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கி, ‘Z+’ பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஸ்.பி. ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழு(Special Protection Group) இந்தியாவின் பிரதமர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அருகில் இருந்து பாதுகாப்பை வழங்கும் ஆயுதப்படை ஆகும். இது 1988 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. எஸ்.பி.ஜி பிரிவில் சுமார் 3 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு படைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் எஸ்.பி.ஜி குழுவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பாதுகாப்பில் 'zero error' என்பதே இவர்களது குறிக்கோள் ஆகும்.
இந்தியாவில் தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கி, Z+ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூவருக்கும் நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் அவர்களுக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இந்தியாவில் எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பார்.
இந்த தகவல் வெளியானதையடுத்து, இது குறித்து பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல், இந்த நடவடிக்கை ஒரு சதி என்றும், ஆர்.எஸ்.எஸ்ஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் கூறினார். "இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் தியாகம் செய்ததை நாடே அறியும். காந்தி குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பது அறியப்படும் ஒன்று. அக்குடும்பத்திற்கு எதுவும் நடக்க காங்கிரஸ் அனுமதிக்காது" என்று படோல் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், "பாஜக இறுதியில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் இறங்கியுள்ளது. 2 முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களுக்கு அரசு சமரசம் செய்துள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில், உளவுத்துறையினர், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜியின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சொந்த மெய்க்காப்பாளர்களால் பதவியில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட பின்னர் எஸ்.பி.ஜி உருவாக்கப்பட்டது. அப்போது இந்திரா காந்தி டெல்லி காவல்துறையின் ஏஸ் பிரிவு மூலம் பாதுகாக்கப்பட்டார். இந்திரா காந்தியின் படுகொலை சிறப்பு பாதுகாப்பு குழு அமைக்க வழிவகுத்தது.
பின்னர், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி எஸ்பிஜி பாதுகாப்பு இல்லாத நேரத்தில், பதவியில் இல்லாதபோது கொல்லப்பட்டார். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் காந்தி குடும்பத்திற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையடுத்து, பல ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு தொடரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், காந்தி குடும்பத்தினரிடமிருந்து எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற அரசு எடுத்த முடிவுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.