முன்னாள் பெண்போராளிகள் இருவரின் உரையாடல் இது!!!

வான்நிலாவும் வண்ணமதியும் தோட்டவேலைக்குச் செல்பவர்கள், இருவருமே குடும்பச் சுமைகளை தாங்கும் ஏழைப்பெண்கள், தவிர, இருவரும் முன்னாள் போராளிகள். இன்றுவரை சமூக நீரோட்டத்தில் கலக்கமுடியாது தாம் உண்டு. தம் வாழ்க்கை உண்டென எண்ணி வாழ்வு போகும் பாதையோடு சேர்ந்து ஓடுபவர்கள். வேலைக்குச் செல்லும் அவர்கள் இருவரினதும் உரையாடல் இதோ உங்களுக்காகவும்.......


வான்நிலா : ஏய்....என்னடி வண்ணமதி, ஏன் அமைதியா வாறாய், மற்ற நேரத்தில உன்ர வாய் ஓயவே ஓயாது, நான்தான் அமைதியா வருவன், நீ ஓயாமல் கதைப்பாய், இண்டைக்கு என்னடி, வலு  அமைதியா வாறாய்?

வண்ணமதி : ஓமக்கா, உண்மைதான், என்ர வாய் சும்மா எண்டா ஓயாது தான், இண்டைக்கு நான் கேள்விப்பட்ட விசயம் மனதுக்குள்ள பயத்தை தந்திட்டுது.

வான்நிலா : என்னடி, பூடகமா கதைக்கிறாய், என்ன விசயம்?

வண்ணமதி : என்னக்கா, நீங்கள் கேள்விப்படேல்லயே, வல்வெட்டித்துறையில நடந்த சம்பவம்.

வான்நிலா : என்ன சம்பவம்?

வண்ணமதி : அதுதான் அக்கா, ரி.ஐ.டி விசாரணைக்கு எண்டு போனவர் திரும்பேல்லயாம், அவரைக் காணேல்ல எண்டு பொலிஸில முறைப்பாடு குடுத்துக் கிடக்காம்.

வான்நிலா : என்னடி சொல்லுறாய், உது எப்ப நடந்தது?

வண்ணமதி : நேற்று இரவு பேஸ்புக்கில வந்தது, தமிழருள் இணையத்தில பகிர்ந்திருந்தவை.

வான்நிலா : உண்மையாவோடி, நினைக்க பயமாக்கிடக்கு.

வண்ணமதி : உண்மைதான் அக்கா, போர் ஓய்ஞ்சு பத்து வருசம் போட்டுது, தடுப்பால வந்து ஏழெட்டு வருசமாச்சு. ஆனால் எங்கட வாழ்க்கை முறையில ஒரு மாற்றமும் இல்லை, மனசில அதே பயம், இப்ப வரைக்கும் இருக்கத்தான் செய்யுது.

வான்நிலா : ஓமடி, நீ சொல்லுறது சரிதான், சமூகத்தில நாங்கள் சேரவும் முடியேல்ல, நிம்மதியா வாழவும் முடியேல்ல.....

வண்ணமதி : ஓமக்கா,....கொஞ்சநாள் இனி துன்பமில்லை, என்ற எண்ணத்தில ஏதோ... ஒருமாதிரி தைரியமா இருந்தம், இப்ப திரும்ப இப்பிடி ஒரு ஆப்பு......

வான்நிலா : இனி. ஒவ்வொருத்தரா விசாரணை எண்டு கூப்பிடுவாங்கள் போல, அப்பிடி இல்லாட்டியும் வீட்டுக்கேனும் வந்து விசாரிக்கத்தான் செய்வாங்கள்.

வண்ணமதி : அக்கா நான் உங்களிட்ட சொல்ல மறந்திட்டன், எங்களோட தடுப்பால வந்த அலைமகள் அக்கா வீட்ட ரெண்டுபேர் விசாரிக்க எண்டு வந்தவையளாம்.

வான்நிலா : அப்பிடியே, என்ன கேட்டவையளாம்?

வண்ணமதி ; வேற என்ன, இப்ப என்ன செய்யிறியள், ஏன் இன்னும் கலியாணம் செய்யேல்ல, இதுகளைக் கேட்டிட்டு, பதிவுகள் துலைஞ்சு போட்டுது, அதுதான் திரும்ப பதிவு எடுக்க வந்தனாங்கள் எண்டு சொன்னவையளாம்.

வான்நிலா : நல்ல கதைதான், அரசாங்கம் மாற மாற பதிவுகளையும் துலைப்பினம் போல....

வண்ணமதி : ஓமக்கா, அதைத்தான் அவவும்  கேட்டிருக்கிறா, ஒவ்வொருத்தர் மாற மாற பதிவு எடுக்கிறனீங்களோ எண்டு.

வான்நிலா : ஏன் கலியாணம் கட்டேல்ல எண்டு கேட்டா என்ன பதிலைச்சொல்லுறது, எங்களை சீதனமில்லாம கட்டுறதுக்கு ஆர் தயாரா இருக்கினமாம்?

வண்ணமதி : அதுசரிதான் அக்கா, எங்கட இளமைக்காலத்தில இந்த மண்ணை நேசிச்சம், அதுக்காக எங்கட உயிரையும் குடுக்க தயாரா இருந்தம், ஆனால் விதி???

வான்மதி : ஓமடி, பட்டினி இல்லாத வாழ்க்கை வாழ ஓடுற நிலைமை எங்களுக்கு. உடம்பாலையும் மனசாலையும் கஸ்ரப்படுறம், எங்கட பெயரைச்சொல்லி, எங்கட உணர்வுகளைச் சுரண்டி சிலபேர் நல்லா இருக்கினம்.

வண்ணமதி : ஓமக்கா, எங்களைப்போல உண்மையா விசுவாசமா நடந்தவையளுக்கு வறுமைதான் மிஞ்சினது, அதுவும் போக இப்ப நிலைமை இப்பிடி, பயத்தோட வாழுற வாழ்க்கை.

வான்மதி : உண்மைதானடி, இனி உப்பிடியே மெல்ல மெல்ல வெளியில தெரியாமல் எங்களைப்போல இருக்கிறவையளின்ர  வாழ்க்கையும் அழிஞ்சிடும் போல கிடக்கு.

வண்ணமதி : ஓமக்கா, அதை நினைக்கத்தான் எனக்கு பயமா கிடந்தது. விசாணைக்கு கொண்டுபோய் விசாரிச்சிட்டு, சுட்டா கூட பரவாயில்லை, போராடப்போனம், அதுக்காக ஏதோ ஒரு வகையில உயிரைவிட்டம் எண்டு இருக்கும், இது......உவங்கள் விசாரணை எண்டு, எங்களை சின்னாபின்ன படுத்துவாங்களோ எண்டுதான் மனசு பதைபதைக்குது.

வான்மதி : சரி சரி பயப்பிடாதை, என்ன செய்யிறது, சர்வதேசம் கூடி எங்கட நியாயத்தை பாத்து ஒரு தீர்வைத் தருகுதில்லை, காலம்தான் பதில் சொல்லவேணும்,

வண்ணமதி : ஓமக்கா, அங்க பாருங்கோ, களை பிடுங்க எல்லாரும் இறங்கீட்டினம், கதைச்சுக்கொண்டு வந்ததில வந்தது கூட தெரியேல்ல. வாங்கோ, நாங்களும் களையளைப் பிடுங்குவம்......

தமிழரசி 
தமிழருள் இணையத்தளம்.  
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.