சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை குறித்து டலஸ் விளக்கம்!!

நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


மேலும் அரசாங்கம், அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் செய்தி  தவறானது.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்திற்கு மொழிகளின் முக்கியத்துவம் இன்றியமையாததாகும்.

யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் முறையான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அரசியல் ரீதியில் ஒருமித்த தீர்மானத்தை எடுத்தார்கள் என்றும் குறிப்பிடவும் முடியாது. ஜனநாயக ரீதியிலே தேர்தல் இடம்பெற்றது.

தமக்கான தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் காணப்படுகின்றன. அதனையே தமிழ் மக்களும் செய்தார்கள்.

இதேவேளை நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இன மக்களையும் ஓரே விதமாக  பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இல்லாத ஒரு விடயத்தை குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் மக்களின் மத்தியில் வன்மத்தை தூண்டும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

நாட்டில் இரண்டு மொழி வழக்கில் உள்ளது. இரண்டு இனத்தவர்களும் இருமொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருத்தல் அவசியமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.