மறைமுகத் தேர்தல்: கடத்தல், பேரம், அமைச்சரின் உள்ளடி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து வெற்றிபெற்ற பிரதிநிதிகள் கடந்த 6ஆம் தேதி பதவியேற்றனர். அடுத்த சில நிமிடங்களில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கவுன்சிலர்கள் அணி மாறாமல் தடுக்கும் வகையில் வாகனத்தில் ஏற்றி ரகசிய இடங்களுக்கு கொண்டுசென்றுவிட்டனர்.
பெரும்பான்மை இல்லாத இடங்களில் சுயேச்சைகளை இழுக்க அதிமுக, திமுக இடையில் போட்டா போட்டி நிலவியது. இதன் காரணமாக உசிலம்பட்டியில் பதவியேற்ற கையோடு ஒன்றிய கவுன்சிலர் சுவர் ஏறிக் குதித்து ஓடிய வீடியோ வைரலானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவைப் பெறுவதற்காக அவரது இல்லத்தில் அரசியல் கட்சியினர் காத்திருந்த சம்பவமும் நடந்தது.
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை காலை நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது வரை மறைமுகத் தேர்தலுக்காக அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்களைக் காண்போம்.
கிருஷ்ணகிரி மத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் 3, 600 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் துணைத் தலைவர் பதவிக்கு வெற்றிவேல், சங்கீதா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. இருவருக்கும் தலா 3 பேரின் ஆதரவு இருக்கும் நிலையில் 4ஆவது நபரின் ஆதரவைப் பெற இருவரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வார்டு உறுப்பினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. 4ஆவது நபரின் ஆதரவைப் பெற 8 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது. இந்த நிலையில் 3ஆவது வார்டில் வெற்றிபெற்ற கலா மாதேஷை, குடும்பத்தினருடன் கடத்திவிட்டதாக மாதேஷின் சகோதரர் கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை ஊத்தங்கரை ஒன்றியத்தில் 22 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் அதிமுக கூட்டணி 9 (அதிமுக-6, பாமக-3) இடங்களிலும், திமுக 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 1 இடத்திலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். இங்கு பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமியின் ஆதரவாளரான உத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம், தனக்கு வேண்டப்பட்ட வேங்கன் என்பவரை ஒன்றியத் தலைவராக்க முயற்சித்து வருகிறார்.
ஆனால், வேங்கனுக்கு எதிராக தருமபுரி மாவட்ட அமைச்சர் கே.பி.அன்பழகன் ரகசிய உள்ளடி வேலைகளை செய்து வருவதாக சொல்கிறார்கள். திமுகவுக்கு சேர்மன் பதவி போனாலும் பரவாயில்லை, வேங்கன் மட்டும் வரக்கூடாது என்பதில் கே.பி.அன்பழகன் தெளிவாக இருக்கிறார். இதற்காக பாமக கவுன்சிலர்களிடமும் பேசியிருக்கிறார். இதற்கு காரணம் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அமைச்சருக்கு எதிராக வேங்கன் வழக்கு தொடர்ந்ததுதான் என்று சொல்கிறார்கள் விவரமறிந்த அதிமுகவினர்.
மாவட்டக் கவுன்சிலர்கள் விவகாரத்திலும் பல்வேறு அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 29 பேர் உள்ளனர். இதில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் சரிசமமான இடங்களைக் கைப்பற்றியது. இதனால் யாருக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இதில் தனித்து நின்று வெற்றிபெற்ற மதிமுக உறுப்பினர் கந்தசாமியின் வாக்கு யாருக்கு என்பது கேள்விக் குறியாக உள்ளது.
ஏனெனில் கடலூர் மாவட்ட ஊராட்சி 22ஆவது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிட கந்தசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். இதே இடத்தில் அவர் பலமுறை வென்றவர் என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், மதிமுகவுக்கு அந்த இடத்தை ஒதுக்காமல் திமுகவே போட்டியிட்டது. இதனால் மதிமுக சின்னத்தில் கந்தசாமி தனித்து களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக, திமுக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றிபெற்றார். அவரை சந்தித்து திமுக தரப்பிலிருந்து ஆதரவு கோரியபோது, முதலில் நான் திமுக கூட்டணி சார்பில்தான் சீட் கேட்டேன், ஆனால் மறுத்துவீட்டீர்கள். இப்போது, வெற்றிபெற்ற பிறகு மட்டும் என்னுடைய ஆதரவு தேவைப்படுகிறதா என்று கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இருப்பினும், கட்சித் தலைமையில் என்ன சொல்கிறதோ அதன்படி முடிவெடுப்பேன் என கந்தசாமி கூறியுள்ளதால் எப்படியும் பதவியைக் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது.
இவையெல்லாம் ஒரு உதாரணம்தான். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராம ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவது, சுற்றுலா அழைத்துச் செல்வது, ரகசிய இடங்களில் அடைத்துவைப்பது போன்ற அதிரடி சம்பவங்களும், திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன. நாளை நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில் இதனை விட கூடுதல் சம்பவங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.