தீபிகா வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ!
தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்த சப்பாக் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஆசிட் வீச்சை மையப்படுத்தி, நிஜ வாழ்க்கையைப் படமாக்கி எடுக்கப்பட்டிருந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளைப் பெற்றது. ஆசிட் பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தும், பெண்களுக்கு எதிரான ஆசிட் வீச்சு சம்பவங்கள் இந்தியாவில் குறையாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இத்தகைய பொருட்கள் தடையை மீறியும் மிக எளிதில் வாங்கக் கிடைக்கிறது என்பதை ரகசிய கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ மூலம் தீபிகா விளக்கியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருவதும் அதிர்ச்சியைத் தருவதாகவும் உள்ளது.
ஆசிட் வீச்சு, ஒருவருக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் விதமாக பாதிக்கப்பட்ட சிலர் தீபிகா பேசுவதைத் தொடர்ந்து அந்த வீடியோவின் ஆரம்பத்தில் தோன்றுகிறார்கள். பின்னர் கல்லூரி மாணவன், பிசினஸ் மேன், பிளம்பர், குடும்பப்பெண் என வேடமணிந்த சிலர் சில கடைகளுக்குச் செல்கிறார்கள். அவர்களுள் ஒருவர் மது போதையில் இருக்கும் நபராகவும் வேடமணிந்துள்ளார். அவர்கள் கடைகளில் சென்று ஆசிட் கேட்கும் போது எந்த கேள்வியும் கேட்காமல் சிலர் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அவர்களிடம் ஆசிட் வழங்குகிறார்கள்.
இதில் ஒரே ஒரு கடைக்காரர் மட்டும், ''எதற்காக ஆசிட் வாங்குகிறாய்? உன் ஐடி கார்டை காண்பிக்க வேண்டும்” என்று கேட்கிறார். இவ்வாறாக ஒரே நாளில் மட்டும் 24 ஆசிட் பாட்டில்களை அவர்களால் வாங்க முடிந்தது. இவை அனைத்தையும் ரகசிய கேமராக்கள் மூலமாக தீபிகாவும், அவரது குழுவினரும் படம்பிடித்துள்ளனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இது போன்ற ஆசிட் விற்பனையைத் தடுக்க வேண்டும் என தீபிகா படுகோன் அந்த வீடியோ மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர் மீதான பொதுமக்களின் பார்வையை உணர்த்தும் விதமாக தீபிகா வெளியிட்ட வீடியோவும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
கருத்துகள் இல்லை