சிவகாசி பயங்கரம்: 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!

பால் மணம் மாறா குழந்தைகளையும், துள்ளி விளையாடும் சிறுமிகளையும் பாலியல் இச்சைக்கு ஆளாக்கும் காமக் கொடூரர்களின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 2018 – 19ஆம் ஆண்டில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. சிறுமிகளையும், குழந்தைகளையும் சிதைக்கும் இதுபோன்ற கொடூரங்களைக் கட்டுப்படுத்த போக்சோ சட்டம் , ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் கைது என நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சிவகாசியில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ளது கொங்கலாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது சித்துராஜபுரம். இந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் சுந்தர். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மா. சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பெயர் பிரித்திகா (8). கொங்கலாபுரம் அரசு துவக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (ஜனவரி 20) மாலை நான்கு மணிக்கு வேலையை முடித்துக்கொண்டு சுந்தர் வீட்டுக்கு வந்தார். 4.30 மணியளவில் பள்ளியிலிருந்து குழந்தை பிரித்திகாவும் வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு, தான் வெளிக்காட்டுக்கு சென்று வருவதாக கூறிய பிரித்திகா பக்கத்தில் இருந்த முள் காட்டுக்குள் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளார். அதன் பிறகு, குழந்தை பிரித்திகா வீட்டுக்குத் திரும்பவில்லை. வேலை செய்து விட்டுத் திரும்பிய அசதியில் சுந்தர் சிறிது நேரம் படுத்துத் தூங்கி விடுகிறார். மாலை 6 மணிக்கு பத்மா வேலை முடிந்து வந்ததும் குழந்தையைத் தேடியுள்ளார். வழக்கமாக விளையாடச் செல்லும் இடங்களில் எல்லாம் தேடியும் குழந்தை காணவில்லை என்பதால் இரவு பத்து மணிக்குச் சிவகாசி நகரக் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், காலை 8 மணிக்கு முள் காட்டுப்பக்கம் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகச் சென்ற சில பெண்கள் ஒரு இடத்தில் வாடிப்போன செடிகள் குவிந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பக்கத்தில் சென்று அவர்கள் அந்த செடிகளை எடுத்துப் பார்த்துள்ளனர். அங்கே குழந்தை பிரித்திகாவின் உடல் கிடந்துள்ளது. அவரது, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அலங்கோலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து அங்குச் சென்று போலீசார் பார்த்ததில் குழந்தை பிரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தடய அறிவியல் குழு, மருத்துவர்கள் குழு, மோப்ப நாய் படை ஆகியவை நிகழ் விடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மருத்துவர் குழு குழந்தை பிரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தது. அதன் பின்னர், முள்காட்டின் பல இடங்களில் ஆய்வு செய்த தடய அறிவியல் குழு, நான்கு பேர் கொண்ட கும்பல் மது அருந்தியிருந்ததை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய டம்ளர் மற்றும் பாட்டில்கள், சிறுமியின் பள்ளிச் சீருடை உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றியது. கைரேகை மற்றும் காலடித் தடங்களையும் பதிவு செய்துள்ளது. மோப்ப நாய் குழந்தை பிரித்திகா கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து நேராக சித்துராஜபுரம் ஊருக்குள் சென்றுள்ளது. ஒரு சில இடங்களில் நின்று நின்று சுற்றிய பின்னர் புறக்காவல் நிலையம் பின் பக்கம் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று அங்கேயே படுத்து விட்டது. இந்நிலையில் சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் குழந்தை பிரித்திகாவின் உறவினர் ஒருவரும், அவருடைய நண்பர் மற்றும் மூன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பட்டாசுத் தொழிற்சாலை ஊழியர்களும் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை பிரித்திகாவின் உறவினர் கல்லூரி மாணவர் என்றும் அவர் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்து வருபவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்விடத்துக்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள், குற்றவாளிகளிடம் எந்த கருணையும் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு டிஎஸ்பி பிரபாகரன், நகரக் காவல் ஆய்வாளர் இமானுவேல் ராஜன் ஆகிய இருவருக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அசாம் தொழிலாளர்கள் மூவரும் நேற்று இரவே ரயில் மூலம் சிவகாசியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Blogger இயக்குவது.