பல்துறை ஆளுமையான ஏ.இ.மனோகரன்!!

இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு எனும் பாடல் பாடி மக்கள் மனதை வென்ற பொப்பிசை பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்.


இலங்கையின் இயற்கை வளங்களை, பாடல்கள் மூலம் கண்முன் கொண்டு வந்தவர்.

புகழ் பெற்ற பொப்பிசை பாடகரான பின்னர் தன்னிடமுள்ள இயல்பான நடிப்புத்திறனால் சினிமாத்துறையிலும் இணைந்துவிட வேண்டும் எனும் அவரின் கலைப்பசிக்கு வித்திட்டவர்.

எமது பாடசாலை ஆசிரியரான திரு. தேவானந்த் அவர்களே... அதே போல் தென்னிந்திய சினிமா நுழைவுக்கு வித்திட்டவர் எம் கல்லூரியின் பழைய மாணவனான இயக்குனர் வி.சி.குகநாதன் அவர்களே..

ஆம்...

1960 களில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் ஜோ. தேவானந்த் அவர்களின் "பாசநிலா" என்ற 16 மி.மி. படத்தில் நடித்த அனுபவம் அவரை செங்கை ஆழியான் அவர்களின் வாடைக்காற்றில் நடிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.

பின்னர், தென்னிந்தியா சென்று,எம்மவரான ஈழத்தில் சங்கானையையே சேர்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவனுமான பிரபல இயக்குனர் கதாசிரியர் வி.சி.குகநாதன் அவர்களின் உதவியால், அவர் இயக்கி விஜயகுமார் கதாநாயகனாகவும் கூடவே ரஜனிக்காந்தும் இணைந்து நடித்த மாங்குடி மைனர் என்ற படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து, பல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் வில்லனாக நடித்தார்.

தமிழில் குறிப்பாக கமல்ஹாசன் அவர்களின் குரு திரைப்படத்தில் மோகன்பாபு & நம்பியார் அவர்களுடன் முக்கிய பாத்திர மெற்று நடித்திருந்தார் என்பதினையும் இங்கே நினைவு கூறலாம். மலையாள திரையுலகில் விபத்தில் மரணமான முன்னாள் பிரபல கதாநாயகன் ஜெயன் இவரது உற்ற நண்பன்.

அதேபோல் தெலுங்கில் சீரஞ்சிவி அவர்கள்... இவருடைய நல்ல நண்பன். இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

மேலும் அண்மைக் காலத்தில், சின்னத்திரை நாடகங்களில் தோன்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. சில காலங்களாக இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மனோகரன் அவர்கள், நேற்றைய தினம் (22) மாலை சிகிச்சை பலனின்றி அமரத்துவமடைந்து விட்டார்.

''கல்வியறிவற்ற சாதாரண மக்களையும் 'பைலா'ப் பாடல் கருத்துக்கள் சென்றடையத்தக்க வித்துவப் பெறுமதியினால் எல்லா இசை வடிவங்களையும் விட 'பைலா' மேம்பட்டிருந்தது. உலகம்பூராகவும் இசைக்கப்படும் போர்த்துக்கேய செல்வாக்குப் பெற்ற இசைவடிவங்களில் இலங்கை 'பைலா' வும் ஒன்று.

போர்த்துக்கேயரினால் கீழைத்தேய இசையில் ஏற்படுத்தப்பட்ட புதிய பரிமாணத்தின் வெளிப்பாடாகத் திகழும் 'பைலா' சாதாரண மக்கள் தமது துன்பத்தை மறந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க வைக்கும் சக்தி மிக்கதாக திகழ்ந்தமையினால் நம்மிடையே மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இலங்கை தீவிலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இவ்வாறான இசை வடிவின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர்களில் ஏ.ஈ.மனோகரன் அவர்களுக்கும் மிக முக்கியமான பங்குண்டு என்றால் அது மிகையாகாது.

அன்னாரின் பேரிழப்பினால் அவதியுறும் அவரின் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலினை தெரிவித்துக் கொள்வோம்.

White and White (வெள்ளையும் வெள்ளையுமான ) ஜென்ரில்மேன்கள் உலாவிய யுகமொன்று இருந்தது. அவர்களில் ஒருவர் தான் எங்கள் பொன்ட் மாஸ்ரர்.

யாழ்ப்பாண மண்ணில் கல்வி விளக்கேற்றிய கலங்கரை விளக்குகளில் அவரும் ஒருவர் 1996 இல் நான் அவருடன் பழகியது நான்கே நான்கு மாதங்கள் தான்.

ஆனால் 40 வருடங்கள் பழகியது போல ஒரு ஆத்மார்த்த நேசிப்பும் பாசமும் எம்முள் இருந்தது.

Chemistry எனப்படும் இரசாயனவியல் ஒரு காலத்தில் O/L பாடமாக இருந்த காலம் இருந்தது.

அப்போது Bond என்றொரு பாடம் இருந்தது. அதில் Single bond and Double bond பகுதியை ஐயம் திரிபறக் கற்பிப்பதில் மிகவும் நிபுணத்துவம் மிக்க ஒருவராக வடமராட்சியைச் சேர்ந்த கனகசபை ஆனந்தகுமார் என்ற எங்கள் பொன்ட் மாஸ்ரர் இருந்தார்.

உயர்தரத்தில் இரசாயன பாடத்தை தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த ஒரு பிரபல ஆசிரியர் கூட ரகசியமாக இவரிடம் வந்து பொன்ட் பகுதியைக் கேட்டுத் தெரிந்தவராம்.

Bond பாடம் கற்பித்த படியால் அவருக்கு பொன்ட் மாஸ்ரர் என்றொரு பெயர் வந்தது. ஆனந்தகுமார் என்றால் யாருக்கும் தெரியுமோ தெரியாது.

ஆரம்பத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் சதா பொன்ஸ் ரியூசனில் கற்பிக்க ஆரம்பித்தார்.

பின்னர் யாழ்ப்பாணம் வந்து கற்பிக்க ஆரம்பித்தார். யாழ் பொன்ட் இன்ஸ்ரிரியூற்றினை நிறுவினார். பல்லாயிரம் மாணவர்கள் பயிலும் தனியார் கல்வி நிறுவனமாக அதனை உருவாக்கினார்.

அவரது ஆளுகைக்கு கீழ் இருந்த ரியூட்டரி வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த மாணவர்களுக்கு கல்வித் தீபம் ஏற்றியது.

வெள்ளை வெள்ளையான நீளக்காற்சட்டை அரைக் கை சேட் சகிதம் அவர் ஒரு வெள்ளை ஸ்கூட்டரில் எந்த நேரமும் ஓடியபடி இருப்பார்.

அவரது ஓய்வற்ற 24 மணி நேர உழைப்பு யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. அவர் பின்னாளில் நடுத்தர வயது வரமுன்னரே நோயாளியாகிய போது என்னிடம் கூறினார்

” நன்றாக உழையுங்கள். ஆனால் உணவு நித்திரை ஆகியவற்றைத் துறந்து உழைக்காதீர்கள் வயது இருபதுகள், முப்பதுகளில் நாம் உடல் நலனை நினைக்காது செய்யும் வேலைகளின் எதிரொலி 40 வயதில் உடலில் கேட்குமென்றார்.

அது உண்மை. அவரது ஆலோசனையை நான் கடைப்பிடித்து வந்து அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன்.

அவரது கல்வி சாம்ராஜ்ஜியங்களை போரும் விழுங்கத் தொடங்கியது. 1983 இன் பின்னர் இறங்குமுகமாகவே சென்றது.

ஆனால் இறுதி வரை கல்விப் பணியைக் கைவிடவில்லை.

ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு அண்மையாக பொன்ட் கல்வி நிறுவனத்தை அமைத்தார்.

சில வகுப்புகளை நடத்தினார். பரீட்சைகளுக்கான மாதிரி வினாத்தாள்களை மிகக் குறைந்த விலையில் தரமாக வெளியிட்டார்.

1996 இன் ஆரம்பத்தில் நான் அரச பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளுக்குப் பொது அறிவுப் பாடத்தைத் தனியார் நிறுவனங்களில் கற்பிக்கத் தொடங்கிய காலம்.

பொன்ட் மாஸ்ரரின் யாழ் கல்வி நிலையத்திலும் கற்பித்த அந்த 4 மாதங்கள் ஒரு ஆத்மார்த்தமான நட்பு உருவாகியது.

அப்போது யாழ்ப்பாணத்திலுள்ள இன்னுமொரு பிரபல கல்வி நிறுவன அதிபர் எனது பாடக் குறிப்புகளைப் புத்தகமாக அடித்துத் தருவதாக வெடி கொழுத்தினார்.

இந்த விடயத்தை பொன்ட் மாஸ்ரரிடம் ஒரு நாள் சொல்லிக் கவலைப்பட்டேன்.

எனது பாடக் குறிப்புகளைத் தான் றோணியோ புத்தகமாக அடித்துத் தருவேன். உங்களது பாடக் குறிப்புகள் தரமானது. புத்தகமாக வந்தால் நன்றாக விலைப்படுமென நம்பிக்கை தந்தார்.

எனது அப்பா உடனேயே உரிய காசை ஒழுங்கு செய்து தந்தார். 1996 ஓகஸ்ட் 26 ஆம் திகதி எனது முதலாவது பொதுஅறிவுப் புத்தகம் வந்தது.

பின்னர் கொழும்பிலுள்ள புத்தக நிறுவனங்கள் மூலமாகப் 11 புத்தகங்கள் வந்தது. பலமுறை பல்லாயிரம் பிரதிகள் மறுபிரசுரம் கண்டது.

புத்தக வெளியீட்டுத் துறை என்பது வாழ்க்கையில் ஒரு சதவீதமேனும் நான் நினைத்துப் பார்க்காத துறை.

பொன்ட் மாஸ்ரர் ஒரு நாள் எனது வலது கையைத் தரச் சொல்லி கைரேகை மூலமான சாத்திரத்தை மிகவும் துல்லியமாகக் கூறினார்.

எனது கடந்த கால வாழ்வின் சம்பவங்களை ஒரு படம் போல விபரித்தார்.

எதிர்காலம் குறித்த முன்னறிவித்தலையும் துல்லியமாகச் சொன்னார். அவர் சொன்னபடியே நிகழ்கிறது.

பின்னாளில் அவர் நோயுற்றபடியே கொழும்பில் இருந்தார். ஒரு தடவை சென்று பார்த்தேன்.

அவர் காலமாகிய போது 31 ஆம் நினைவுநாளன்று தினக்குரல் பத்திரிகையில் கண்ணீர் அஞ்சலியைப் பிரசுரித்தேன்.

புத்தக வெளியீட்டுத் துறையில் அகரம் இட்டென்னை ஆளாக்கிய ஆசானுக்கு அஞ்சலிகள் கோடி.

இன்று அவரது 20 வது ஆண்டு நினைவு தினம். பொன்ட் மாஸ்ரர் குறித்து ஒரு நினைவுப் பதிவை இட வேண்டுமென பல மாதங்களாக முயற்சித்தேன்.

விஞ்ஞான ஆசிரியர் இரா.செல்வவடிவேல் அவரது உயிர் நண்பர். அவரிடம் பொன்ட் மாஸ்ரர் குறித்தான புகைப்படங்கள் பல உள்ளது.

அவற்றை வாங்கி போட்டோக்களின் தொகுப்பாக நினைவுக் குறிப்பை வெளியிட முயற்சித்தேன்.

இரா.செல்வவடிவேல் மாஸ்ரரும் நானும் ஓய்வாக நேரில் சந்திக்கும் நேரம் இன்னும் பொருந்தி வரவில்லை.

ஆனாலும் மிக விரைவில் அருமையான அப் புகைப்படங்கள் மீளவும் ஒரு அஞ்சலியாக பிரசுரமாகும்.

என் ஏணிப்படிகளில் ஒருவராகிய அருமை ஆசானுக்கு அஞ்சலிகள் கோடி.கோடி.கோடி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.