டீல்காரர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது- சஜித்!

புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை வெற்றி கொள்வோம் எனக்கூறிய எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச டீல் காரர்களுடன் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மனற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை சஜித் பிரேமதாச சந்திக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சஜித் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அடைந்த பின்னடைவால் நாம் ஒருபோதும் சோர்வடையக்கூடாது. பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலேயே நான் ஜனாதிபதி வேட்பாளரானேன். என்றாலும் எனது வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு 55 இலட்சம் மக்கள் எமக்கு வாக்களித்த யாரையும் கைவிட்டு விட முடியாது. அதேபோன்று பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களை கண்டு எமக்கெதிராக வாக்களித்த மக்கள் தற்போது உண்மையை உணரத் தொடங்கியுள்ளனர். அதனால் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு, பொதுத் தேர்தலை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்றார்.

அத்துடன் அனைத்து முற்போக்கு சக்திகளையும் கூட்டிணைத்துக் கொண்டு புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைவோம் என்றும் , அதற்காக கிராம மட்டத்திலிருந்து சக்தி பெற வேண்டும் என கூறிய சஜித், பொதுத் தேர்தலில் புதிய மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்த தயார் என்றும், அதற்காக யாரையும் ஒதுக்க மாட்டோம். அனைவரையும் இணைத்துக் கொண்டே செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணிக்கு தலைமைதாங்க நான் தயார் என்றும், ஒற்றுமையே எமது பலம். ஒற்றுமை பெயரளவில் இருக்க முடியாது. அதேபோன்று எமது எதிர்த்தரப்புடன் டீல் போட்டுக் கொண்டு செயற்படுபவர்களுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. டீல் அரசியல் கட்சிக்கும் நல்லதில்லை என்பது அது நாட்டுக்கும் நல்லதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பிரசாரத்திற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிற்கும் சென்றிருந்தது போல நன்றி செலுத்த தற்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்என்றும் குறிப்பிட்ட சஜித், நாங்கள் செல்லும் கிராமங்களில் மக்கள புதிய இலக்கை நோக்கி செல்ல தயாராகவே இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

புதிய அரசு பதவியேற்றதும் எமது தரப்பினர் அரசியல் பழிவாங்கலிற்கு உள்ளாகி வருகின்ர நிலையில், பலர் தொழிலை இழந்துள்ளதுடன் சிலர் தூரப் பிரதேசங்களிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதும், அரசியல் பழிவாங்கலிற்கு இலக்கானவர்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது முதற்பணியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு ஐ.தே.க மற்றும் கூட்டணியின் ஒற்றுமை அதன் உறுப்பினர்களிற்கு பயனுள்ள முடிவுகளைக் கொண்டு வர வேண்டும். அரசியல் எதிரிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து இந்த கூட்டணி விடுபட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐ.தே.கவோ, கூட்டணியோ யாருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஒரு பௌத்த தேசம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் விவாதம் இல்லை. ஆனால்‘ எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கட்டும் ’என்று கற்பிக்கும் புத்தரின் பிரசங்கத்தை கடைபிடிக்க வேண்டும். பௌத்தம் முன்னுரிமையளிக்கப்பட்டாலும், ஏனைய மதங்கள் தமக்கான சுதந்திரத்துடன் செயற்படும்.

கட்சி அல்லது புதிய கூட்டணி ஒரு தனிநபரின் சொத்தாக மாறக்கூடாது, மாறாக அவர்களை ஆதரிக்கும் அனைவருக்கும் ஒரு சொத்தாக மாற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், புதிய கூட்டணிக்கு தான் தலைமை தாங்குவதை அங்கீகரிக்கும் உறுப்பினர்களை கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவிக்குமாறு எதிர்கட்சித்தலைவர் சஜித் கேட்டுக் கொண்டபோது கூட்டத்திலிருந்தவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.