ஆஸ்திரேலியாவை நோக்கி படகு வழியாக சென்ற சீனர்கள்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலா?

சீனா எங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் பரவலாக உள்ள நிலையில், அப்பதற்றம் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின்

வடக்கு கடல் பகுதியினூடாக 6 சீனர்கள் நுழைய முயன்ற சம்பவம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த ஆறு சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர்.

இந்தோனேசிய படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற Ashmore தீவுப்பகுதி அருகே சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கை அதிகாரிகளின் பார்வையில் சிக்கியுள்ளனர்.

“ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் சீனர்கள் என்று அறியப்பட்டதும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்,” என கூறியுள்ளார் துணை காவல் ஆணையர்.

“ஆஸ்திரேலிய எல்லைப் படையினர் வைரஸ் தொற்று குறித்து அச்சம் கொண்டுள்ளனர்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சீனர்களை பரிசோதித்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இது ஆட்கடத்தல் கும்பலின் செயல்பாடு என்ற ரீதியில் இந்தோனேசிய குடிவரவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Blogger இயக்குவது.