ஆர்யா பெர்மாணா: முயற்சியின் புது முகவரி!

தன்னம்பிக்கையுடன், கடினமாக முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தியுள்ளார் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்யா பெர்மாணா என்னும் சிறுவன்.



நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நண்பரையோ அல்லது உறவினரையோ சந்திக்க நேர்ந்தால், நம்மில் பலரும் கேட்கும் முதல் கேள்வி ‘என்ன இப்பிடி இளைச்சு போய்ட்டீங்க?’ என்பதோ அல்லது, ‘ஏன் பா இவ்வளவு குண்டாயிட்ட?’ என்பதோ ஆகத் தான் இருக்கும். ஒருவரது ஆரோக்கியத்தையும், அவரது மகிழ்ச்சியையும் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பெருமளவில் வெளிக்காட்டி விடுகிறது என்பதால் தான் இந்தக் கேள்வி நம்மை அறியாமல் கூட எழுந்து விடுகிறது. 


பெரும்பான்மையானவர்கள் அன்பின் மிகுதியால் இவ்வாறு கேள்வி எழுப்பும்போது, சிலர் கிண்டல் தொனியில் ‘பாடி ஷேமிங்’ செய்து உளைச்சலில் இருப்பவருக்கு மேலும் மன உளைச்சலையும் தந்து விடுகின்றனர்.


பொதுவாக உடலின் அமைப்பும், உடல் எடையும் மனிதனின் மனநிலையில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவுப் பழக்கத்தின் காரணமாகவோ, நோய்களின் தாக்கத்தாலோ அல்லது பழக்க வழக்கத்தாலோ உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டவர்கள் பலரும் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாதா என்ற ஏக்கத்துடன் பல முயற்சிகளிலும் இறங்கி வருகின்றனர். 


பல நாட்கள் முயற்சி செய்தும் வெளிப்படையாக எந்த மாற்றமும் தென்படவில்லை என்றால் மனமுடைந்து சோர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் புது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்துள்ளார் ஆர்யா பெர்மாணா என்னும் பதினான்கு வயது சிறுவன்.


இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்த சிறுவன், 2016-ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக எடைகொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றார். பிறந்தபோது வெறும் மூன்றரைக் கிலோ எடையுடன் சாதாரண குழந்தையாக இருந்த ஆர்யாவிற்கு நாட்கள் செல்லச் செல்ல, படிப்படியாக எடை அதிகரிக்கத் தொடங்கியது. 


வெறும் இரண்டே வருடங்களில் எழுபது கிலோ எடை வரை அதிகமாகி உலகின் அதிக எடைகொண்ட குழந்தை என்ற பெயரை வாங்கினார். உடல் எடையின் காரணமாக தனியாக எழுந்து நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ கூட கஷ்டப்பட்ட அவர் சாதாரணக் குழந்தையாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடனே தனது நாட்களைக் கடத்தினார்.


இது ஒருபுறம் என்றால் அவரது எடையும் உணவுப் பழக்கமும் ஆர்யாவின் பெற்றோருக்கு அதிக பயத்தைத் தந்தது. இப்படியே போனால் தங்கள் குழந்தைக்கு ஏதாவது நேரிடுமோ என்ற அச்சத்தால் பல நாட்கள் தூக்கதையும், நிம்மதியையும் தொலைத்தே வாழ்ந்து வந்தனர். 2016-ஆம் ஆண்டு பத்து வயது சிறுவனாக இருந்த ஆர்யாவின் எடை 190 கிலோவாக மாறிய போது, உலக மக்கள் அனைவருக்கும் அது ஆச்சரியத்தைத் தந்தது. அவர் மீதான பார்வைகள் கூட அனுதாபத்தின், வேடிக்கையின் பார்வையாகவே இருந்தது.


இந்த நேரத்தில் தான் அடேய் ராய் என்னும் பாடி பில்டர், ஆர்யாவின் பயிற்சியாளராக மாறினார். விளையாட்டில் ஆர்யாவிற்கு இருந்த அதீத ஆசை, பயிற்சியாளர் அடேய் ராய்க்கு இலக்கை நோக்கிய எளிய வழியை அமைத்துக் கொடுத்தது. ஆனால் வழி எளிமையானதாக இருந்தாலும் பயணம் எதிர்பார்த்ததை விடவும் கடினமாகவே இருந்தது. 


தொடர் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மற்றும் சில அறுவை சிகிச்சைகளின் வாயிலாக நான்கே வருடங்களில் 108 கிலோ எடை வரைக்கும் ஆர்யாவால் குறைக்க முடிந்தது. தற்போது 82 கிலோ எடை கொண்ட ஆர்யா தனது முயற்சியை மேலும் தொடர்ந்து வருகிறார்.


பயிற்சியாளர் அடேய் ராய் சமீபத்தில் ஆர்யாவின் உடல் எடை மாற்றப் பயணத்திற்கான உடற்பயிற்சி வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது என்று மட்டும் வெறுமனே கூறிவிட முடியாது. பலருக்கும் தன்னம்பிக்கையின் அளவையும், முயற்சி செய்ய வேண்டும் என்ற உந்துதலையும் மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. ஆர்யாவின் முயற்சி மேலும் தொடர்ந்து வருகிறது.
முயற்சி நிச்சயம் திருவினையாக்கும் என்பதை வாழ்ந்து காட்டி ஆர்யா நிரூபித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.