திருச்சி பாஜக பிரமுகர் கொல்லப்பட்டது ஏன்?

திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளதாகத் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு  (ஜனவரி 30) தெரிவித்துள்ளார்.


திருச்சியில் பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த 27ஆம் தேதி காந்தி மார்க்கெட் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விஜயரகுவின் மகளுக்கு பாபு என்கிற மிட்டாய் பாபு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும். இதன் காரணமாகக் கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. விஜயரகு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் நேற்று அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”17 வயதான விஜயரகுவின் மகளிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்றதில் ஏற்பட்ட பிரச்சினைதான் கொலையில் முடிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்” என்று கூறினார்.

விஜயரகு கொலை குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று இதுதொடர்பாக ஆணையர் வரதராஜு செய்தியாளர்களிடம் பேசினார். ”விஜயரகு கொலை வழக்கில் ஹரிபிரசாத், பாபு என்கிற மிட்டாய் பாபு இருவரும் சென்னை பூக்கடையில் கைது செய்யப்பட்டு நேற்று மாலை திருச்சி கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுடர்வேந்தன், சச்சின்(எ) சஞ்சய், யாசர் ஆகியோர் கைதாகினர். வரகனேரி பகுதியைச் சேர்ந்த மிட்டாய் பாபு, விஜயரகு மீது கொண்டிருந்த தனிப்பட்ட பகை காரணமாகக் கடந்த 27ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

பின்னர் இது லவ் ஜிகாத் என தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆணையர் வரதராஜு, இந்த கொலை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகத்தான் நடந்துள்ளது. அவ்வளவுதான் கூற முடியும். விசாரணை நடந்து வருகிறது என்றார்.

தனிப்பட்ட விரோதத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் கூற மறுத்த ஆணையர், இந்த கொலையில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளார்களா என்பது விசாரணையில் தெரியவரும். கொலை நடந்த அன்று சம்பவ இடத்தில் ஹரிபிரசாத் மற்றும் மிட்டாய் பாபு இருவரும் இருந்தனர். இக்கொலைக்குச் சதித் திட்டம் தீட்டிய 3 பேர் நாகைக்குச் தப்பிச் சென்றனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.இந்த விவகாரத்தில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விசாரணை அதிகாரிகளைக் குறை கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் வழக்கு குறித்து மட்டுமே பேச முடியும். பல்வேறு தரப்பினரும் பல கருத்துகள் கூறுகின்றனர். அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. விஜயரகு, அவரது உறவினர் கிருஷ்ணகுமாருக்கும், மிட்டாய் பாபுவுக்கு கடந்த ஜனவரி முதலே முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாகவே கொலை நடந்துள்ளது. மற்றபடி இதில் கலர் பூசும் விவகாரம் எதுவும் இல்லை.

கைது செய்யப்பட்ட யாசர், பாபு மீது பல வழக்குகள் உள்ளன. இதில் பாபு 2019ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.