வானம் கொட்டட்டும் நட்பிற்காக ஒரு பாடல்!
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ஈசி கம், ஈசி கோ’ என்னும் பாடல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம், ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள கல்லூரி நட்பைக் குறித்த ‘ஈசி கம், ஈசி கோ’ பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சிவா ஆனந்த் வரிகள் எழுதியுள்ள இந்தப்பாடலை சித் ஸ்ரீராம், சஞ்சீவ், MADM, தபாஸ் நரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், சரத்குமார், ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.