முல்லையில் கொரோனா வைரஸ் தொற்றா?

முல்லைத்தீவில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று என்று பரவிய செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பில் சீனப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படலாம் என பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டிருந்து. எனினும் இலங்கையர்களுக்கு அவ்வாறான தொற்று எதுவும் இல்லை என்றும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

இந்தநிலையில், முல்லைத்தீவில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக நேற்று இரவு சமூக வலைத்தளங்களும் சில இணைய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபரை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனை செய்ததாகவும், எனினும் அவ்வாறான தொற்று அவரிடம் இல்லை என்றும், பரவிய செய்தியில் உண்மையில் என்றும் மறுத்துள்ளார்.இதேவேளை, முல்லைத்தீவு மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தும் வசதி இல்லை என்பதாலேயே அவரை கொழும்புக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.