ரஜினிக்கு எதிராக தொடரும் வழக்குகள்!

பெரியார் பற்றி பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் இன்று (ஜனவரி 22) நடைபெற்றது. ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்திய திவிகவினர் 150 பேர், செம்மொழி பூங்காவில் ஆரம்பித்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசார் அனைவரையும் செம்மொழி பூங்கா அருகே வழிமறித்து தடுத்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட 96 பேர் சமூக நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டு மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக திவிக தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் மீது புகார் அளித்தோம். ஆனால், காவல் துறையினரின் மெத்தனப்போக்கால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரஜினி, பெரியாரை இனி சீண்டினால் தமிழகத்தில் அவருடைய ஒரு படம் கூட ஒடாது. பெரியாரை பற்றி அவதூறாக பேசிவிட்டு, ஆதாரத்தை காட்டுகிறேன் என்று யாரோ எழுதிய கட்டுரையை காட்டியுள்ளார்.உண்மையானவராக இருந்தால் 1971ஆம் ஆண்டு வந்த துக்ளக் பத்திரிகையை எடுத்துக் காட்டி இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும். இது முதல்கட்ட முற்றுகை போராட்டம் தான். இனி, ரஜினி திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றும் கூறினார்.

பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி ஏற்கனவே திவிக உமாபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் அதே அமைப்பைச் சேர்ந்த கோவை மாவட்டத் தலைவர் நேருதாஸும் இன்னொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய கோவை காட்டூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.