மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்த சீன கப்பல்!

சீனாவிலிருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னை வந்துள்ளது. இதனை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


சீனாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் முக்கிய நகரங்களிலும் அதிகளவு பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. 362 நகரங்களில் 7,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் சீனாவிலிருந்து தமிழகத்துக்கு 15ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும், அவர்களில் 68 பேரைக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

விமான நிலையங்களில் தெர்மல் ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டு அதன் பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவ வாய்ப்பு ஏற்பட்டால் அது சீனாவிலிருந்து வரும் விமான பயணிகளால் மட்டுமே ஏற்படும் அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று ஏற்படாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

விமான நிலையங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், சீனாவிலிருந்து சென்னைக்கு மருத்துவ கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னை வந்துள்ளது. அந்த கப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.கப்பலை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்ததாகத் தெரிகிறது. எனினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

சீன மருத்துவ கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னை வந்துள்ள நிலையில், அதனைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலைச் சென்னை கடல் பகுதியிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே கொல்கத்தா துறை முகத்திலும், கப்பலில் வரும் பயணிகளிடம் கொரோனா பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.