உலக அரங்கில் தமிழ் சிறுமியின் கதை!

சென்னை மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு கமலி மற்றும் ஹரிஷ் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவனைப் பிரிந்து வாழும் சுகந்தி, அதே பகுதியில் மீன் விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
தன்னுடைய கனவுகள் சூழ்நிலையாலும், சமூக கட்டமைப்புகளாலும் சிதைந்து போனதைப் போல் தன் ஒரே மகளின் எதிர்காலமும் ஆகிவிடக்கூடாது என்று எண்ணி கமலிக்கு பறக்க கத்துக்கொடுத்திருக்கிறார்.

பத்து வயது சிறுமி கமலி தான் அச்சிறிய கிராமத்தின் முதல் பெண் skateboarder. அதே பகுதியை சேர்ந்த சக ஸ்கேட்போர்டு பிரியர்களுடன் சேர்ந்து மஹாப் ஸ்கெட்டர்ஸ் என்ற அணியை ஆரம்பித்து தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் கிராமவாசிகள், கமலியின் ஆர்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் சுகந்தி விடாபிடியாக தன் மகளுக்கு ஆதரவாக நின்றார்.

தற்போது கமலி பற்றிய ஆவணப்படத்தை லண்டனை சேர்ந்த சாஷா என்பவர் இயக்கி, உலகெங்கிலும் உள்ள முக்கிய விருது விழாக்களில் திரையிட்டு வருகிறார். திரையிட்ட இடங்களில்லெல்லாம் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், 2020க்கான ஆஸ்கார் விருது பரிந்துரையிலும் இடம்பெற்றது. 

தற்போது பாப்தா விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 24 நிமிடங்கள் நீளம் கொண்ட ஆவணப்படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் கடந்த வருடம் ஹுப்பிங்போஸ்ட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
கமலி பற்றி அதன் இயக்குநர் சாஷா கூறுகையில், “சுகந்தி போன்ற தைரியமான பெண்கள் தங்களுடைய கதவுகளைத் திறந்து வழிவிடுவதால் தான் ஒளி புகுந்து நம்பிக்கை பிறக்கிறது. அந்த நம்பிக்கை தான் கமலி.” என்கிறார்.

Blogger இயக்குவது.