பகிடிவதை விவகாரம் - சட்டநடவடிக்கை உறுதி என்கிறார் வடக்கு ஆளுநர்!
யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
பகிடிவதை தொடர்பான விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
எனக்குக் கிடைத்த அறிக்கையின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரை இன்று நான் சந்திக்க இருக்கின்றேன். அத்தோடு அந்த மாணவர்களுக்கு எதிராக சரியான சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.
வடக்கு மாகாண மாணவர்களது அடிப்படை உரிமைகளும் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் எமது ஜனாதிபதியின் உறுதுணையோடு முன்னெடுக்கப்படும். சீரழிந்து செல்லும் இந்தச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தப் பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பெற்றோரதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமானவை.
அத்தோடு ஊடகங்களும் சமூக அமைப்புக்கள் உரிய நேரத்தில் விடயங்களை சுட்டிக்காட்டும் போது, அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo