வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளாரா?

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன்தான் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூட்டணியின் கனவு ஒருபோதும் பலிக்காது. இந்தக் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரனும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் ந.சிறிகாந்தாவும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில் திருமதி அனந்தி சசிதரனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாலேயே விக்னேஸ்வரன் தலைமையில் மாற்றுத் தலைமைக்கான இந்தப் புதிய கூட்டணி உருவாகியுள்ளது எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகக் கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது இந்தியாவில் நிற்கும் மாவை சேனாதிராஜா தொலைபேசியூடாகத் தெரிவித்ததாவது:-

"தனி ஒருவரோ அல்லது அவர் தலைமையில் சிலர் கூட்டிணைந்தோ புதிய கட்சியை அல்லது புதிய கூட்டணியை ஆரம்பிப்பது ஜனநாயக உரிமை. இதை எவராலும் தடுக்க முடியாது.

ஆனால், “மாற்றுத் தலைமை” என்ற பெயரில் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள ’தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற புதிய கூட்டணியின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதே ஆகும்.

இந்தக் கூட்டணியின் நோக்கம் - திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில், தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் இந்தக் கூட்டணிக்குப் பதிலடி கொடுப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் ஆணையை மீறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டதில்லை. இந்தமுறையும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் ஆணை வழங்குவார்கள். தமிழர் தாயகத்தில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எத்தனை கட்சிகள் - கூட்டணிகள் மோத வந்தாலும் அத்தனையும் தேர்தலில் மண்கவ்வுவது உறுதி என மேலும் தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.