அலுவலகத்திலேயே திருமணம் செய்துகொண்ட ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள்!!

பொதுவாக ஒரு வீட்டில் குடிமைப் பணிகளில் இருப்பவர்கள் எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் எப்போதும் மக்கள் தேவைக்காக உழைக்க வேண்டும் என்பதால் அவர்கள் ஏக பிஸியாகவே இருப்பார்கள். அதிலும் ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் குடிமை சார்ந்த பணிகளில் இருந்தால் சொல்லவே தேவையில்லை.


இப்படியான நிலைதான் குஜராத்தைச் சேர்ந்த ஒரு காதலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2015 பேட்சைச் சேர்ந்த துஷர் சிங்லா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் 2017 பேட்சைச் சேர்ந்த நவ்ஜோத் சிமி பெண் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். துஷர் தற்போது மேற்குவங்கத்தில் உள்ள ஹௌராவில் மாவட்ட ஆட்சியராகவும், சிமி பிகாரில் உள்ள பாட்னாவில் டி.எஸ்.பியாகவும் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இருவரும் குடிமைப் பணிகளில் இருப்பதால் இருவருக்குமே திருமணம் செய்துகொள்ள போதுமான நேரம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பலமுறை திருமணத் தேதி குறித்தும் அது தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது. இதனால் இருவரும் காதலர் தினமான நேற்று முன் தினம் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அதுவும் ஹௌராவில் உள்ள துஷரின் பணி அலுவலகத்திலேயே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. சார்பதிவாளரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்துப் பெற்றோர் மற்றும் ஒரு சில உறவினர்கள் சூழ மிகவும் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தனது காதலனைக் கரம் பிடிப்பதற்காகச் சிமி பிகாரிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு மேற்குவங்கம் சென்றுள்ளார். இந்த அதிகாரிகளின் சிறப்புத் திருமணம் மற்றும் புகைப்படங்கள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"இருவரும் அரசாங்க அலுவலகத்தில் திருமணம் செய்துகொள்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரும் கையொப்பம் மட்டுமே போட்டனர். மற்றபடி விருந்து போன்ற எதுவும் அங்கு நடைபெறவில்லை. இதில் எந்தத் தவறும் இல்லை” என்று ஹௌரா மாவட்ட தலைவர் அருப் ராய் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.