இலங்கை பெண்களை இந்தியாவுக்கு கடத்த முயற்சி!!

இந்தியாவில் உள்ள மசாஜ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக இலங்கையைச் சேர்ந்த பெண்களை சட்டவிரோதமாக அழைத்துச் செல்லும் இந்திய பிரஜைகள் இருவர் உட்பட மூவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களால் இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்தாகக் கருதப்படும் இலங்கை பெண்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 வயதான, திருமணமான பெண்கள் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்,

இந்தியப் பெண்ணொருவரை திருமணம் செய்துள்ள இலங்கையைச் சேர்ந்த தரகர் ஒருவரால் குறித்த பெண்கள் இருவரும், கல்கிஸை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துவரப்பட்டு, இந்திய பிரஜையொருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அந்நபர் இப்பெண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்வித்ததன் பின்னர், அவர்களுக்கு விமானச் சீட்டை பெற்று கடந்த 21 ஆம்திகதி 8.30 மணிக்கு சென்னை நோக்கி செல்வதற்காக இன்டிகோ விமான சேவையின் 6ஈ 1204 என்ற விமானத்தில் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த இந்தியப் பிரஜை மற்றும் இலங்கை பெண்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பகுதிக்கு வந்து, சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியதால் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் விமான நிலையக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்போது, வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய குறித்த ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கை தரகரும், அவரது உதவியாளரான இந்திய பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவர்களிடமிருந்து பல இலங்கைப் பெண்களின் கடவுச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.