சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும்' - கேரள கன்னியாஸ்திரி லூசி களப்புரா நம்பிக்கை!!

லூசி களப்புரா, இந்த ஒற்றைப் பெயர் ஒட்டு மொத்த கேரளாவையும் கதிகலங்கச் செய்துள்ளது. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மீது நிகழ்த்திவந்த அத்துமீறல்கள் புனிதத்தின் பெயரால் மூடி மறைக்கப்பட்டு வந்தன. அப்படி அரிதிலும் அரிதாக ஒரு கன்னியாஸ்திரி, தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொன்னால், அவர்மீதே குற்றம் சுமத்தப்பட்டு சபையை விட்டு நீக்குவதாகக் குற்றச்சாட்டு எழுவதுண்டு.


இந்த நிலையில், 54 வயதான இந்த கன்னியாஸ்திரி லூசி களப்புரா, 'கர்த்தாவிண்டே நாமத்தில் ' என்ற பெயரில் தன் சுயசரிதை ஒன்றை எழுதினார். இதில், பாதிரியார்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் அத்துமீற முயன்றவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். இது, கேரளாவில் பெரும் புயலைக் கிளப்பியது.

மேலும், கன்னியாஸ்திரிகளிடம் அத்துமீறிய ஸீரோ மலபார் சபையின் பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அந்தப் போராட்டத்தில் லூசியும் கலந்துகொண்டு, பாதிரியாருக்கு எதிராகக் குரல்கொடுத்தார். பிஷப் பிராங்கோ, பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில், அத்துமீறல்களை வெளியில் சொன்ன கன்னியாஸ்திரி லூசி களப்புராவை சபையை விட்டு நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர். சக கன்னியாஸ்திரிகளாலும், பிராங்கோ ஆதரவாளர்களாலும் தனிமைப்படுத்தப்பட்டுவந்த லூசி, தனக்கு நீதி கிடைக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என வாடிகனுக்கு முறையீடு செய்தார். ஆனால், இவரின் முறையீடு நிராகரிக்கப்படுவதாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாஸ்திரி லூசி களப்புராவை தொடர்புகொண்டு பேசினோம். ``மத கோட்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டதாக எனக்கு நோட்டீஸ் வந்தது. அதற்கு உரிய பதில் அளித்தேன். ஆனால், `பதில் முறையாக இல்லை' என்றனர். வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையிடம் முறையீடு செய்தேன்; நிராகரித்தனர்.

இரண்டாம் முறையீடே கடைசி வாய்ப்பு என்பதால், இரண்டாம் முறையும் முறையீடு செய்தேன். ஆனால், தற்போது இதுவும் நிராகரிக்கப்படுவதாக கடிதம் வந்துள்ளது. மேலும், இத்தாலி மொழியில் கடிதம் அனுப்பியுள்ளனர். தற்போது, இந்திய சட்டத்தின் மூலம் மட்டுமே எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொடர்பான விசாரணை மானந்தாவாடி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.