கொரோனா தாக்கம்- விமான சேவையை குறைத்துக்கொண்ட நிறுவனங்கள்!

உலகம் முழுவதும் தற்போது `கொரோனா' என்கிற கோவிட் 19 வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் குறிப்பாக விமானச் சேவை பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.
பல விமான நிலையங்கள் பரபரப்பு குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்திய அளவிலும் கொரோனா வைரஸின் அச்சம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதமே ஏர் இந்தியா நிறுவனம், சீனா மற்றும் ஹாங்காங்குக்கான விமான சேவையை ரத்து செய்தது. இதற்குப் பிறகு, கொரோனா வைரஸால் விமானங்கள் ரத்து செய்யப்படுவது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

ஏர் இந்தியா நிறுவனம் சீனாவின் முக்கியப் பகுதிகள் மற்றும் ஹாங்காங்குக்குச் செல்லும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் ஜூன் கடைசி தேதி வரை ரத்து செய்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் டெல்லியிலிருந்து குவான்க்ச்சோ (guangzhou) மற்றும் செங்க்டு (Chengdu) செல்லும் விமானங்களை ஜூன் 14-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

விஸ்தாரா நிறுவனம் இந்தியாவிலிருந்து செல்லும் 54 வெளிநாடு விமானங்களின் சேவையை நிறுத்தி வைத்துள்ளது. இதில் 34 விமானங்கள் சிங்கப்பூர் செல்பவை, 20 விமானங்கள் பாங்க்காக் செல்பவை.

தற்போது மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் இத்தாலிக்கு செல்லும் தனது பல விமானங்களை ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளன.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் டெல்லியிலிருந்து ஹாங்காங்குக்குச் செல்லும் விமானங்களை மார்ச் 28-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

கோ ஏர் நிறுவனம் சவுதி அரேபியா அரசின் வலியுறுத்தலுக்குப் பிறகு தம்மம் மற்றும் சவுதிக்குச் செல்லும் தனது விமானங்களைத் தடை செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம் பாங்காக்குக்கு மும்பையிலிருந்தும் டெல்லியிலிருந்தும் தினமும் விமானங்களை இயக்கி வந்தது. தினமும் புக்கேட்டுக்கு (phuket) செல்லும் விமானங்களை மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களிலிருந்து இயக்கி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, தாய்லாந்துக்குத் தினமும் ஒரே ஒரு விமானச் சேவையை மட்டுமே தருகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் டோக்கியோ, சியோல் மற்றும் மிலானுக்கு செல்லும் விமான சேவைகளை நான்கு நாள்களிலிருந்து இரண்டு நாள்களாகக் குறைத்துள்ளது. இதனுடன் கூடுதலாக மும்பை - சிங்கப்பூர் - டெல்லி சேவையையும், டெல்லி - பாங்காக் - மும்பை சேவையையும் மே 31 வரை நான்கு நாள்களிலிருந்து மூன்று நாள்களாகக் குறைத்துள்ளது.

உலக ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் கொரோனா வைரஸ் காரணமாக சீனா மற்றும் ஹாங்காங்குக்கான தங்களது விமான சேவையை ரத்து செய்துள்ளது. இதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் மொரிஷியஸ், ஏர் சியோல், ஏர் டான்சேனியா, ஏர்பிரான்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.

எதிஹாட்ஸ் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனம் பீஜிங்குக்கு மட்டும் தங்களது விமான சேவையை இயக்குகிறது. சீனாவுக்குச் செல்லும் பிற விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க எமிரேட்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களிடம் சம்பளம் இல்லாத விருப்ப விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளது.


கொரோனா வைரஸால் விமான சேவைகளின் பாதிப்பு குறித்து டைம்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அதுல் டோடி, ``அடுத்த ஆறு மாதத்துக்கு விமானத்துறை கொரோனா வைரஸால் மிகப்பெரும் சரிவைச் சந்திக்கவுள்ளது. இதனால், விமானத்தின் பெர்மிட்கள், பராமரிக்கும் செலவு உள்ளிட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குள் விமானத்துறை செல்லவுள்ளது. இதனால் பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்" என்றுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன் சீனாதான் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய விமான சந்தையாகச் செயல்பட்டது. கொரோனா வைரஸ் ஏற்பட்ட பிறகு, பிப்ரவரியில் விமானத்துறையில் 25வது இடத்துக்கு சரிந்தது சீனா.

இந்தியாவிலும் உள்நாட்டு விமானத்துறை கடந்த சில வருடங்களாக முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால், 2019-ல் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக விமானத்துறையும் சரிவைச் சந்தித்தது. இதோடு முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலடைந்தது. இதனால் ஜனவரி மாதத்தில் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 2 சதவிகிதம்தான் இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் வேறு ஏற்பட்டுள்ளதால் பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கான விமானத்துறை வளர்ச்சி கேள்விக்குறியாகவே உள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்களிடையே விமான சேவையைப் பயன்படுத்துவதில் சிறு அச்சம் நிலவுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.