பெண் விடுதலை குறித்த “பிரபாகரனியத்தின்” முழுப் பரிமாணம்.
போதாததற்கு சுமந்திரன் உலக மகா பெண்ணியவாதிகளை தேர்தலில் இறக்கி விட்டிருப்பதாக செம்புகளின் பீத்தல் வேறு.
எல்லாம் காலக் கொடுமை.
ஏற்கனவே எழுதிய ஒரு கதைதான் மீண்டும்.
புலிகளின் நடைமுறை அரசில் வன்னியின் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் அதனது தாய் குறித்து வினாவினால் அனேகமாக கிடைக்கும் பதில் இப்படித்தான் இருக்கும், “அம்மா சண்டைக்கு போட்டா..”
இந்த ஒற்றை வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது பெண் விடுதலை குறித்த “பிரபாகரனியத்தின்” முழுப் பரிமாணம்.
மதத்தால், சாதியால், சமூக ஒடுக்குமுறைகளால் பெண்ணானவள் வீட்டுக்குள்ளேயே முழுவதுமாக முடக்கப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது “பிரபாகரனியம்”.
இதன் வழி தமிழீழத்தில் பெண்ணானவள் தன்னை மட்டும் விடுவிக்கவில்லை, சமூகத்தையும் இனத்தையும் விடுவிக்கும் ஒரு உக்கிர வடிவமெடுத்து நின்றாள்.
தமிழீழ நடைமுறை அரசு இன்றைய உலக ஒழுங்கினால் அழித்தொழிக்கப்பட வேண்டிய இலக்காக தேர்வு செய்யப்படதற்கு பிராந்திய – புவிசார் அரசியல் மட்டும் காரணமல்ல, பல உதிரிக் காரணங்களும் உள்ளன..
அதில் பிரபாகரனியம் உருவகித்த இந்த பெண் சமூக மாற்றமும் ஒன்றாக அதுவும் இந்திய அளும் வர்க்கத்திற்கு தேவையான ஒன்றாக இருந்தது.
இந்துத்துவம் என்ற இதிகாச புனைவுகளின் வழி நின்று சாதி, மத, பெண்ணொடுக்கு முறைகளினூடாக போலியாக ஒற்றைத் தேசமாக உருவாக்கப்பட்டதுதான் இந்திய
“ஒன்றியம்”.
அருகே ஒரு தேசம் இவற்றை ஒட்டுமொத்தமாக உடைத்தெறிந்து உலகிற்கே முன்னுதாரணமாக உருவாவதென்பது இந்திய ஒன்றிய தேசிய இனங்களை பட்டியை விட்டு வெளியேறும் ஆட்டு மந்தைகளாக மாற்றும் என்பதை அறிந்தும், மேலும் இந்த போலி இழையினூடாக நீண்ட நாட்களுக்கு அவற்றை கட்டி வைக்க முடியாது என்பதுமே தமிழீழ நடை முறை அரசை அழிக்க மேலும் வலுவூட்டிய உதிரிக் காரணமாகும்.
பெரியார் உட்பட இதுவரைகால சிந்தனையாளர்கள் அனைவரும் ஒரு முன்னோடி. அவ்வளவே.. பிரபாகரன் அதன் எல்லை மீறிய ஒரு பாய்ச்சல்.
தமிழீழத்தில் பெண்களை மையப்படுத்திய கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்கிறது.
அதற்கு இவர்கள் பேசும் பெண்ணியம் என்ன தீர்வை முன் வைக்கிறது?
ஒன்றுமில்லை..அத்துடன் தனியே பெண்ணுரிமையைப் பற்றிப் பேசும் பெண்ணியம் ஆபத்தானதும் கூட..
ஏனென்றால் இன அழிப்புப் பின்புலத்தில் எமது பெண்களுக்குத் தேவை தனித்த உரிமை அல்ல – உரிமையுடன் கூடிய வாழ்வு.
அதற்குப் பிரபாகரனியமே ஒரே தீர்வு.
பெண்ணியத்தை அரைகுறையாக விழுங்கி விட்டு, மேற்கிலிருந்து தரவிறக்கிய Download Feminism மற்றும் உலகமயமாதல் பின்னணியில் பெருகி வரும் NGO Feminism உம் என்ன மாதிரியான கோளாறுகளை அறுவடை செய்து வருகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிவோம்.
இது இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரல் என்பது மட்டுமல்ல மிக ஆபத்தான பின்விளைவுகளைத் தந்து இனஅழிப்புக்கு ஊக்கியாக செயற்படவல்லவையும் கூட.
இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.
விளைவு தங்கு தடையின்றி கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு தொடரும்.
எனவே எமக்குத் தேவை ‘பிரபாகரனியம்’.
அது பெண் விடுதலையை அதன் சரியான அர்த்தத்தில் இன அழிப்பு பின் புலத்தில் ஒரு கோட்பாடாக முன் வைக்கிறது.
ஒரு காலத்தின் அதன் முழுப் பரிமாணத்தை வெளிப்படுத்தியவர்கள் மட்டுமல்ல/ அதன் குறியீடாகவே வாழ்ந்தவர்கள் தமிழீழப் பெண்கள்.
இத்தைகைய பின் புலத்தில் பெண்ணியம் குறித்து எங்களுக்கே வகுப்பா?