ஒட்டுமொத்த சிங்கள மக்களும் ஒன்றிணைந்து கோட்டாபயவை தெரிவு செய்ய யார் காரணம்?

சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாது எனக் கூறிய சிறுபான்மை கட்சித் தலைவர்களினாலேயே ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஒன்றிணைந்து தமது ஜனாதிபதியை தெரிவு செய்தனர் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இதன் ஆபத்தை நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்பதனை விரைவில் புரிந்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் தேசியம் என்பது வேறு. அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு தேவையான உரிமைகளை வென்றெடுப்பது என்பது வேறு. ஆனால் தமிழ் இனவாதம் என்பது ஒரு போதும் எமக்கான தீர்வினை தராது.

தமிழ் முஸ்லிம் இனவாதம் தலைதூக்குமேயாயின் நாட்டில் எழுபத்தைந்து வீத சிங்கள இனவாதம் அதற்கு பதிலடி கொடுக்கும் என்பதனை சிறுபான்மை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதி ஒருவரால் வெற்றி பெற முடியாது என்று பகிரங்கமாக சிங்கள மக்கள் முன் சென்று அரைக்கூவல் விடுத்ததன் காரணமாகவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.

இதன் ஊடாக கடந்த காலங்களில் சிறுபான்மையினரின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசாங்கம் இன்று சிறுபான்மையினரின் அவசியம் இன்றி உருவாக்கப்பட கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது சிறுபான்மையினருக்கு பாரிய விலைவை ஏற்படுத்தும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் இதனை தெளிவாக புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒன்றிணைந்தது போன்று தமிழர்களும் தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.

எமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழர்களையே பாராளுமன்றத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் அதே நேரத்தில் தேசிய கட்சிகளில் உள்ள தமிழர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக மாற்று இனத்தவர்களே வெற்றி பெருவார்கள்.

தமிழர் வாக்குகளை மாற்று இனத்தவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு பல தமிழ் தரகர்களை மாற்று இனத்தவர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த தரகர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு பிரச்சார நேரத்தில் விரட்டியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.