காவலர்களை கிண்டல் செய்யும் ‘ஜிப்ஸி’ சென்சார் காட்சி!

ஜீவா நடித்து வரும் மார்ச் 6-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தை, குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ளார். சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதிலும், திரைக்கு வருவதிலும் பெரும் சிக்கல்களை சந்தித்தது. 


ஏற்கனவே வெளியான டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அனைத்தும் பல்வேறு விவாதங்களுக்கும் காரணமாக அமைந்தது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான ரிலீஸ் டீசரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.


குடியுரிமை திருத்த சட்டமும், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றம் என பல பிரச்னைகள் குறித்த புரட்சிகரமான வசனங்கள் அந்த டீசரில் இடம்பெற்றிருந்தது. ‘இந்தியா தான் எங்க ஆளுங்க. இது தான் எங்க நாடு. நீங்க எல்லாம் லூசா?’ ‘துப்பாக்கியால தோட்டாவால ஒரு குரல அடக்கணும்னு நெனச்சீங்கன்னா ஆயிரம் குரல் வெடிக்கும்’ என டீசரில் இடம்பெற்ற வசனங்களும் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் சென்சாரில் நீக்கப்பட்ட ஒரு காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


காவல்நிலையத்தில் பிடித்து வரப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்களும், அவர்களுடனான விசாரணையுமாக அந்தக் காட்சி அமைந்துள்ளது. ‘இவங்க எல்லார் கிட்டயும் விசாரிச்சிட்டேன். யார் கிட்டயும் ஆதார் கார்டு இல்ல. எல்லாம் அனாமத்துப் பயலுங்க’ என்று காவலர் ஒருவர் உயர் அதிகாரியிடம் கூறுகிறார். அது குறித்து பேசும் காலிழந்த மாற்றுத்திறனாளி ஒருவர், ‘தியேட்டருக்குப் படம் பாக்கப் போனேன், தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கலன்னு ஸ்டேஷன் கூட்டிட்டு வந்து டார்சர் பண்றாங்க’ என்கிறார். புதிய சட்டம் குறித்து உரிய விதத்தில் அறிந்திராத காவலரைப்பார்த்து, ‘நீதித்துறை சொல்றது காவல்துறை கேக்காது. 

காவல்துறை சொல்றது நீதித்துறை கேக்காது. மக்கள் சொல்றது எந்தத்துறையும் கேக்காது ’ என்று ஜீவா கூறுகிறார். தொடர்ந்து காவல் அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்ததும் கிளி ஒன்று ‘திருடன், திருடன்’ என்று கத்துவதும் அதைக் கேட்டு அனைவரும் சிரிப்பதுமாக அந்தக் காட்சி அமைந்துள்ளது.
பலரது கவனத்தையும் ஈர்த்த இந்தக்காட்சி, திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.