இலங்கைக்கான இத்தாலி நாட்டின் இராஜதந்திரி:யாழ் மாநகரமுதல்வர் சந்திப்பு!

இலங்கைக்கான இத்தாலி நாட்டின் இராஜதந்திரிக்கும் யாழ். மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டுக்கும் இடையில் இன்றையதினம்  சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட்டுக்கும்  இலங்கைக்கான இத்தாலி நாட்டின் தூதுவர் ரிற்றா ஜி. மனெல்லா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்.மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தூதுவர் யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக மாநகர முதல்வரிடம் வினவினார். 

அதற்கு பதிலளித்த முதல்வர் யுத்த காலத்தில் நடைபெற்ற அழிவுகளுக்கு அப்பால் எத்தனையோ மறைமுகமான உளவியல் ரீதியான அழிவுகளை யுத்தத்திற்கு பின்னர்தான் சந்தித்துள்ளோம் என்பதை குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அரசியல் நிலைமை தொடர்பிலும், புதிய புதிய அரிசயல் கட்சிகளின் உருவாக்கத்தினால் ஏற்படக் கூடிய சவால்கள் குறித்தும் தூதுவர் வினவினார். 

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த கருத்துப் போக்கையும், இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கின்ற அதிகார பகிர்வு நிலைப்பாடுகளை எவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது என்பதையும், மக்களின் நிலைப்பாட்டைக் காட்டும் விதங்கள் குறித்தும் விளக்கியதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது என்பதையும், மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ச்சியான தமது ஆணையை வழங்கி வருகின்றார்கள் என்றும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக இத் தீர்மானத்திலேயேதான் இருக்கின்றார்கள் என்றும், எதிர்காலத்தில் இவ் ஆதரவு இன்னும் அதிகரிக்கும் என்றும், தமிழ் மக்களின் ஒற்றுமையையும், பாராளுமன்றில் உள்ள பலத்தை சிதைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் உதிரிக்கட்சிகளின் போக்குகள் குறித்து மக்கள் மிகுந்த தெளிவுடனே இருக்கின்றார்கள் என்பதையும் உறுதிபட முதலர்வர் தெரிவித்தார்.
சந்திப்பின் இறுதியில் தற்பொழுது அவர்களின் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தாக்கத்தின் விபரீதங்கள் குறித்தும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் தனது நாட்டு மக்களின் நிலைகுறித்த தனது கவலைகளை முதல்வருடன் பகிர்ந்து கொண்டார்.
Blogger இயக்குவது.