யாழில் பட்டப்பகலில் கொள்ளையன் மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு துவைத்தெடுக்கப்பட்ட காட்சிகள்!

யாழ். குப்பிழான் தெற்குப் பகுதியில் வீட்டிலிருந்தவர்கள் தமது மகனின் மரண வீட்டுக்குச் சென்ற சமயம் பார்த்து வீட்டின் மதிலேறிப் பாய்ந்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனொருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.

மற்றைய கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளான்.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் நடந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டிலிருந்தவர்கள் குப்பிழான் வடக்கிலுள்ள தமது மகனின் மரண வீட்டிற்குச் சென்ற சமயம் பார்த்து இன்று பிற்பகல்-05 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் வீட்டின் மதிலேறிப் பாய்ந்து அங்கு திருட்டில் ஈடுபட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டுக்கு அயலில் வசித்து வரும் குடும்பஸ்தரொருவர் மேற்படி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டு விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களைத் திருடன்…திருடன்…என உரத்துக் கத்தியவாறு துரத்தியுள்ளார். கொள்ளையர்களில் ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் மற்றைய கொள்ளையனை குறித்த குடும்பஸ்தர் தொடர்ந்தும் துரத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தற்செயலாக அங்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தரொருவரும், ஊர்மக்களும் இணைந்து மிளகாய்த் தோட்டத்திற்குள் சென்று ஒழிந்து கொண்ட இளைஞனான குறித்த கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர். இதன்போது அங்கு கூடியிருந்த சிலரால் குறித்த கொள்ளையன் மீது தாக்குதலும் நடாத்தப்பட்டுள்ளது.

மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். இதேவேளை, கொள்ளையிடப்பட்ட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
Blogger இயக்குவது.