பதில் பொலிஸ்மா அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான ஊடகங்களிலும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு இவ்விடயம் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பெரும் சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் திணைக்களமும் பொலிஸ் அதிகாரிகளும் கால வரையறையின்றி ஆற்றும் அர்ப்பணிப்பான சேவைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மதிப்பளிக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலுடன் முஸ்லிம் சமூகத்தினரை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான தனியார் ஊடகங்களிலும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அனைத்து மக்களினதும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை துரிதமாக சீர்படுத்துவது எம் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
அதற்கமைய இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைய,
விசேடமாக 2007 இலக்கம் 56 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் 3 ஆவது உறுப்புரையில் கூறப்பட்டிருப்பதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு உங்களிடம் கோரிக்கை விடுக்கிறது.
இது வரையில் வைரஸ் பரவல் தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதில் பொலிஸ் திணைக்களம் பாடுபடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மதிப்பளிக்கிறது.
அதற்கு சமமான முறையில் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உங்களிடம் சமர்ப்பித்திருகின்றோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




