பிரான்ஸ் ஆப்பிள் நிறுவனம் மீது குற்றச்சாட்டு


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை குறைவாக மதிப்பிட்டதுடன், கொரோனா தடமறியும் செயலிக்கு உதவி செய்ய மறுத்துவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் மீது பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.


இந்தியாவின் ஆரோக்கிய சேது செயலி போன்று, பொருளாதாரத்தை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள நாடுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவும் கருவியாக கொரோனா தொற்று கண்டறியும் (Stopcovid) செயலியை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த செயலி, புளூடூத் வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள ஸ்மார்ட் போன்களுடன் இணைக்க உதவுகிறது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குறித்து பயனர்கள் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஆப்பிள் ஐபோன்களில் சாதாரணமாக புளுடூத் வசதி தடுக்கப்பட்டிருக்கும். பயனர் செயலியை பயன்படுத்தி தான் புளுடூத் வசதியை பயன்படுத்த முடியும். பிரான்ஸ் அதிகாரிகள், தங்களுடைய கொரோனா தடமறியும் செயலி பின்னணியில் செயல்படும் வகையில், எப்போதும் புளூடூத் செயல்பாட்டில் இருக்கும் வகையில் ஆப்பிள், தனது போன் அமைப்பை மாற்றி தர வேண்டுமென கேட்டுள்ளனர். ஆனால் ஆப்பிள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


பி.எஃப்.எம் பிஸினஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் பிரான்ஸ் டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சர் செட்ரிக் ஓ கூறியதாவது: ‛ஐபோனில் பயன்பாட்டை இன்னும் சிறப்பாகச் செய்ய ஆப்பிள் எங்களுக்கு உதவியிருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய் விரும்பவில்லை. இதற்கு நான் வருந்துகிறேன். தொற்றுநோய்க்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு பெரிய நிறுவனம் இந்த நெருக்கடியில் ஒரு அரசாங்கத்திற்கு உதவவில்லை. புளூடூத் விவகாரத்தில் ஆப்பிளின் முடிவின் காரணத்தை என்னால் கூற முடியாது.

சுகாதார அமைப்பின் மேற்பார்வையில், கொரோனாவுக்கு எதிராக போராடுவது என்பது அரசாங்கங்களுக்கு ஒரு விஷயம். ஆனால் பெரிய அமெரிக்க நிறுவனங்களுக்கு அவசியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஆப்பிளின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் ஜூன் 2ம் தேதி முதல் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். மே 11ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு தளர்வுகள் அமலாகும் வாரத்தில் செயலியின் சோதனை ஓட்டம் துவங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரான்சில், முதல் காலாண்டில் ஆப்பிள் ஓ.எஸ் பயன்படுத்துவோர் 21.1% ஆகவும், கூகுளின் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் பயன்படுத்துவோர் 78.8% ஆகவும் இருப்பதாக காந்தர் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தும் அதே ஒருங்கிணைந்த முறையை, தன்னுடைய கொரோனா தடமறியும் ஆப்பில், பிரிட்டன் பயன்படுத்தி இன்று சோதனை ஓட்டத்தை துவங்கியுள்ளது.
Blogger இயக்குவது.