தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்

 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தின் (UDHR) முகவுரையில் (preamble) பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது “Whereas it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law,”

அதாவது
“அவசியம் எனில் சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் எதிர்ப்பதற்கு இறுதி தேர்வாக ஆயுதப் போராட்டத்தை முன் எடுக்க முடியும்.”

தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் பல்வேறு சாத்வீக போராட்டங்கள் ஆயுத முனையில் நசுக்கப்பட இறுதி வழியாக (as a last resort ) தமிழ் மக்களின் ஆயுதவழி போராட்டம் ஆரம்பமாகியது.

1976ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகமும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின் சுதந்திரத்திற்கான புனித போரில் இளைஞர்களை ஓய்வின்றி போராட அழைப்பு விடுத்தார். “This convention calls upon .......tamil youth to come forward to throw themselves fully into the sacred fight for freedom and flinch not till the goal....”-
இவ்வாறு முகிழ்த்ததுதான் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். பின் நாளில் அந்தப் போராட்டம் விடுதலைப் புலிகளால் முன் எடுக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டம் பிரித்து பார்க்க முடியாத ஓர் அம்சமே. இந்தியாவின் சுதந்திர போராட்ட தியாகிகளான சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றோர் இந்தியாவால் தேச பிதாக்களாக கௌரவிக்கப்படுகின்றனர். இந்திய அரசும் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானது என ஏற்று அங்கீகரித்ததால்தான்
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆயுத அமைப்புகளில் பெரும்பாலானவையை தனது நாட்டில் பயிற்றுவித்தது என்பது வரலாறு. பின்னர் முழு உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றதால் தான் உலக தலைநகரங்களுக்கு புலிகளை அழைத்து நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

ஒட்டு மொத்த தமிழ் மக்களினது பங்களிப்பும் தார்மீக ஆதரவும் ஏதோ ஒரு வகையில் ஆயுத போராட்ட அமைப்புகளுக்கு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
என்னை பொறுத்த வரையில் ஆயுத போராட்டத்தில் நான் ஈடுபடாத போதும் அதன் தார்மீக நியாயங்களை ஏற்பவன். மனதளவில் அந்த தியாகங்களை ஏற்று மதிப்பவன். நான் ஆயுத போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றால் அதை ஏற்கவில்லை என்றோ எதிர்க்கின்றேன் என்றோ அர்த்தம் கிடையாது.
தமிழ் மக்களின் தார்மீக ஆயுதப் போராட்டத்தை ஏற்காத அல்லது அதன் நியாயங்களை புரியாத எவரும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறுவது வேடிக்கையானது. உண்மையில் தமிழ் மக்களின் உரிமை பற்றி அவர்கள் பேசுவது அவர்களது சுயலாபத்திற்காக மாத்திரமே. உரிமை பற்றி பேசினால் மாத்திரமே தமிழ் மக்கள் தமக்கு வாக்களிப்பர் என்ற உண்மையின் அடிப்படையில் அமைவது.

கொழும்பில் பிறந்து வளர்ந்த தமிழ் மக்களையும் ஆயுத போராட்டத்தை ஏற்காத நிராகரிக்கும் தமிழ் மக்களையும் ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்றி வைத்திருந்ததும் இதே ஆயுத போராட்டம் தான் என்ற கருத்தும் மறுக்கப்பட முடியாதது.

ஆயுத போராட்டத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு. ஆனால் ஆயுதப் போராட்டத்தின் நியாயங்களை நிராகரிப்பவர்களையும் அத்தகையவர்களால் வழிநடாத்தப்படும் அமைப்புகளையும் எமது உரிமையை வென்று தருபவைகளாக நாம் நம்புவதும் அவர்களுக்கு ஆதரவு தருவதும் தான் மிகப் பெரும் தவறு.

வி. மணிவண்ணன்
சட்டத்தரணி
தேசிய அமைப்பாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
Blogger இயக்குவது.