கொரோனா பாதிப்பு இன்று 1,875: 23 பேர் பலி!

தமிழகத்தில் புதிதாக இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நேற்று வரை 36,841 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 1800க்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



கடந்த 24 மணி நேர நிலவரப்படி, குவைத், சவுதி அரேபியா, மாலத்தீவு, மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, அந்தமான் நிகோபார், மேற்கு வங்கம், கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் உட்பட மொத்தம் 1,875 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

16,829 மாதிரிகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20,705ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று 23 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 349ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 17, 659 ஆக உள்ளது. வயது விகிதாச்சாரம் அடிப்படையில், 0-12 வயதுடையவர்கள், 1,999 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13-60 வயதுடையவர்கள் 32,422 பேருக்கும், 60 வயதுக்கும் மேல் 4,295 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று 1,406 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 27,398ஆக அதிகரித்துள்ளது.

-கவிபிரியா
Blogger இயக்குவது.