தனியார் மருத்துவமனைகளின் கட்டண செலவை அரசே ஏற்குமா?

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மத்திய மாநில அரசுகளால் ஏற்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளிடம் அதிகளவு கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜிம் ராஜ் மில்டன் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.



அதில், உயிர் காக்கும் சேவைகளில் ஈடுபட்டு உள்ள முன்னிலை பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு முழு உடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் .

இந்த மனுவுக்குச் சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தினசரி 15 ஆயிரம் பிபிஇ உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.



மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் முறையில் ஆறு மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக காவல் துறையினருக்கு 7850 பேருக்கு முக கவசம், கையுறை வழங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூன் 9) நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்து தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. இது முற்றிலும் தவறானது. அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசே ஏற்க முடியுமா?, கட்டணம் தொடர்பாகப் புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் இவ்வழக்கில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர் .

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா
Blogger இயக்குவது.