விமானப் பயணமா? விண்வெளிப் பயணமா? நடிகையின் மிஷன்

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமானப் பயணம் மேற்கொள்வது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகாக தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புடன் அவர் விமான பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட் மட்டுமல்லாமல் உடல் முழுவதையும் பாதுகாக்கும் விதமான கவச உடையில் ரகுல் ப்ரீத் சிங் இருக்கிறார்.

‘மிஷன் பிளைட்’ என்று தனது பயணத்திற்கு அவர் பெயரை வைத்து முழு கவச உடையில் தான் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்திருக்கிறார்.



இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், “இவ்வாறாக நாம் விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரும் என்று யார் நினைத்து பார்த்து இருப்பார்கள். காலணிகளைக் கூட நான் மூடி வைத்திருக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இங்கு நான் யாரைச் சந்தித்தேன் பாருங்கள்” என்று கூறிக்கொண்டே தனது அருகில் இருக்கும் இயக்குநர் லக்‌ஷ்யாராஜ் ஆனந்த் பக்கமாக கேமராவைத் திருப்புகிறார். ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லக்‌ஷ்யாராஜ் ஆனந்த் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கவச உடையில் இருக்கும் லக்‌ஷ்யாராஜ், ‘நான் விண்வெளிக்குப் போகிறேன்’ என்று விளையாட்டாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ரகுல், “அவர் விண்வெளிக்குச் சென்று அட்டாக் செய்யவுள்ளார். ஏனென்றால் நாங்கள் ‘அட்டாக்’ படத்தின் ஷூட்டிங்கை நடத்த வேண்டியது.” என்று கூறியதுடன், ‘நாங்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறோம்’என்றும் ரகுல் கூறியுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.