சசிகலா விடுதலை: அதிமுக அமைப்பு மாற்றத்தில் எடப்பாடி

பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பதவியை அகற்றிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஆட்சி மன்றக் குழு என்று கூட்டு அதிகாரத்தில் இயங்கி வரும் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அமைப்பு மாற்ற நடவடிக்கைகளில் தீவிரமாகியிருக்கிறார்.

சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிமுக ஊராட்சி செயலாளர்கள் பதவியைத் தூக்கினார், அதைப்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றம் அவரது முகநூல் பகுதியில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின் ஒன்றியங்களைப் பிரித்து மெஜாரிட்டி சாதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர், மைனாரிட்டி சாதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற ஃபார்முலாவை சேலம் புறநகர் மாவட்டத்தில் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார் எடப்பாடி.அடுத்தகட்டமாக ஊராட்சி செயலாளர் பதவிக்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் கூட்டுத் தலைமையை அமைக்க திட்டமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு ஊராட்சியிலும் பத்துபேர் கொண்ட கமிட்டி அமைக்கப்போவதாகச் சொல்கிறார்கள் அதிமுகவினர். மேலும் அதிரடியாக ஜெயலலிதாவை மிஞ்சும் அளவில் ஒன்றிய, நகர, மாவட்டச் செயலாளர்களை மாற்றவும், பட்டியல் தயாரித்துவருகிறார் எடப்பாடி.

இதுபற்றி அதிமுகவில் முதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, “சிறையிலிருக்கும் சசிகலா வெளியில் வராத அளவுக்கு பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள் தற்போது ஆட்சியை நடத்தி வருபவர்கள், காரணம் சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவார்கள் இதனால் அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்ற பயம்தான். மேலும் சசிகலா வெளியில் வந்தாலும் சமாளிக்கும் விதமாகத்தான் அதிமுகவின் கட்டமைப்பை முதல்வர் மாற்றிவருவதாகச் சொல்கிறார்கள். சசிகலா ஆதரவாளர்கள் கட்சியில் யார் இருக்கிறார்கள், தினகரனுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார் என்று அலசி ஆராய்ந்து லிஸ்ட் ஒன்றைக் கையில் வைத்துள்ளவர், அவர்களை மாற்றிவிட்டு தனக்குச் சாதகமான நிர்வாகிகளை நியமித்து விட்டால் சசிகலா வெளியில் வந்தாலும் யாரும் போகமாட்டார்கள் என்று முடிவுசெய்துள்ளார். முதல்வர் முடிவுக்கு ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி போன்ற ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.திமுகவில் ஐ பேக் டீம் செயல்படுவதுபோல், அதிமுகவில் ஒரு டீம் உருவாகியிருக்கிறது. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த சுனில்தான் இப்போது எடப்பாடியோடு நெருக்கமாகியிருக்கிறார். இந்த டீமின் யோசனைகளை அமல்படுத்தி 2021ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கத் திட்டமிட்டுள்ளார்” என்கிறார்கள் முதல்வரைச் சுற்றியுள்ளவர்கள்.

எடப்பாடியின் திட்டம் என்னாகும் என்பது போகப் போக தெரியும்,

-வணங்காமுடி
Powered by Blogger.