மீண்டும் இணையும் 'சூப்பர் டீலக்ஸ்' கூட்டணி!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் சர்வதேச அரங்கில் கவனத்தையும் ஈர்த்தது.


இந்நிலையில், ஊரடங்கில் நேரலைப் பேட்டியொன்று அளித்துள்ளார் ஃபகத் பாசில். மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராகவும் இந்திய அளவில் தேர்ந்த நடிகராகவும் உள்ள ஃபகத், தியாகராஜன் குமாரராஜாவுடனான தனது நீண்ட கால நட்பைப் பற்றி இந்த நேரலையில் பகிர்ந்துள்ளார்.

ஆரண்ய காண்டம் திரைப்படம் முடிந்த பின்பே இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என முடிவெடுத்திருந்தார்கள். ஃபகத் அப்படம் மலையாளத்தில் இருக்க வேண்டுமென விரும்பினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், அத்திட்டம் கைகூடவில்லை என ஃபகத் கூறியுள்ளார்.

அதன் பின்னர், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் திரைக்கதையோடு ஃபகத்தை தியாகராஜன் அனுகியபோது, முதலில் தான் அதற்கு மொழிப்பிரச்சனை காரணமாக மறுத்ததாகவும், பின்னர் இயக்குநர் அளித்த நம்பிக்கையில் தான் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார் ஃபகத். இதனிடையில், சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் ஃபகத் பாசில்.

இது தொடர்பாக ஃபகத் பாசில் அளித்த பேட்டியில், "நான் அவரது அடுத்த படத்தில் இருக்கிறேன். அதைத் தனியாகச் சொல்லவே வேண்டாம். அது தானாக இருக்கும் ஒரு விஷயம். கண்டிப்பாக நான் அதில் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய முக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படம் குறித்த இந்த தகவல் சினிமா ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.