காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு

சமீப நாட்களாக தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறியுள்ளன.


இந்த சூழ்நிலையில் தூத்துக்குடியில் 7 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கல் விளை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இன்று காலை கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் வடவிளை செல்லும் சாலையில் உள்ள இசக்கியம்மன் கோயில் அருகே கால்வாய் பாலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சாத்தான்குளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது இன்று காலை காணாமல் போன சிறுமி தான் என்பது தெரியவந்தது. சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாணிக்க புரத்தைச் சேர்ந்த முத்தீஸ்வரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

-கவிபிரியா
Blogger இயக்குவது.