சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் துருவாவிற்கு கொரோனா
சமீபத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் நடிகர் துருவாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினரும், பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் 7ஆம் தேதி உயிரிழந்தார். 39 வயதேயான அவரது திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நான்கு மாத கர்ப்பிணியான அவரது மனைவி மேக்னா ராஜ், அவரது சகோதரர் துருவா சர்ஜா மற்றும் உறவினர்கள் இந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கதறி அழுத காட்சிகள், ரசிகர்களை மனம் நொறுங்க செய்துவிட்டது.
அந்த கவலையில் இருந்தே அவர்களால் மீண்டு வர இயலாத நிலையில் துருவாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மற்றொரு சோக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் துருவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “என் மனைவிக்கும், எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். விரைவில் நாங்கள் மீண்டு வருவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், விரைவில் நலம்பெற்று வரக்கூறி அவர்களுக்கு நம்பிக்கை வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா