நான்கு அரசுப்பள்ளிகளை தத்தெடுத்த கிச்சா சுதீப்

நடிகர் கிச்சா சுதீப் தனது அறக்கட்டளையின் மூலம் சத்தமே இல்லாமல் பல நற்பணிகளைச் செய்து வரும் நிலையில், அண்மையில் கர்நாடகாவிலுள்ள 4 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளார்.


கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கிச்சா சுதீப். ராஜமெளலியின் 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்தபின் தமிழ் ரசிகர்களையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டவர் இவர்.

கிச்சா சுதீப் தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் இந்த ஊரடங்கு காலத்தில் நம்பிக்கை தேவைப்படும் பல குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை ஊடக வெளிச்சமின்றி செய்து வந்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளை கிச்சா சுதீப் தத்தெடுத்துள்ளார். மேலும் அப்பள்ளிகளின் பராமரிப்பு வசதிகளை கவனித்துக் கொள்ளப் போகிறார் என்பதையும், அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் கணினிகள் நிறுவப்படும் என்றும் அவரது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிச்சாவின் அறக்கட்டளை ஆசிரியர்களின் சம்பளத்தையும், மாணவர்களுக்கான உதவித்தொகையையும் கவனித்துக் கொள்ளப் போகிறது. இந்த நான்கு பள்ளிகளும் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவை சித்ரதுர்கா அரசுப்பள்ளி, பி ஊபாவன்னஹல்லி அரசுப்பள்ளி, சல்லகேரே அரசுப்பள்ளி, பரசுராம்புரா பள்ளி ஆகியவையாகும்.

இந்த நான்கு பள்ளிகளிலும் கல்வி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன எனக் கூறப்படுகிறது. அனைவருக்கும் தொற்றுநோய்களின் போது மட்டுமல்ல, மற்ற நேரங்களிலும் தரமான கல்வியைப் பெறுவதற்கு முதல் கட்டமாக தன்னார்வலர்களை அழைக்கவும், பள்ளிக்கு என்ன தேவை என்பதை மதிப்பீடு செய்யவும் அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கிச்சா சுதீப்பின் இந்த முன்னெடுப்பை பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக பாராட்டி வருகின்றனர்.

-முகேஷ் சுப்ரமணியம்<
Blogger இயக்குவது.